35. குருவாயூர் உற்சவ கஞ்சியும் புழுக்கும்

கும்ப மாசத்தில் வரும் பூய (பூசம்) நட்சத்திரத்தில் ஒவ்வொரு வருடமும் குருவாயூரில் பத்து நாள் உற்சவம் துவங்கி நடைபெறும்.
35. குருவாயூர் உற்சவ கஞ்சியும் புழுக்கும்

கும்ப மாசத்தில் வரும் பூய (பூசம்) நட்சத்திரத்தில் ஒவ்வொரு வருடமும் குருவாயூரில் பத்து நாள் உற்சவம் துவங்கி நடைபெறும். குருவாயூர் முழுவதும் பத்து நாட்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். முதல் நாள் கொடியேற்றத்திற்கு அடுத்த நாளில் புகழ்பெற்ற ஆனையோட்டம் நடைபெறும் அங்கு. அதாவது நீண்ட தந்தங்களுடைய யானைகளுக்கிடையே நடக்கும் ஓட்டப் பந்தயம். கிழக்கு நடையில் மஞ்சுளால் என்ற இடத்திலிருந்து கிழக்கு நடை கோபுர வாசல் வரை எந்த யானை முந்திச் செல்கிறதோ அந்த யானைக்கு குருவாயூரப்பனின் உற்சவத் திருமேனியும், திடம்பும் சுமந்து சீவேலி வலம் வரும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படும். இந்த ஆனையோட்டத்தைக் காண்பதற்காகவே வெளியூர்களில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவார்கள்.

ஆனையோட்டத்தில் ஆரம்பிக்கும் இந்த உற்சவம் பத்தாம் நாள் ஆறாட்டுடன் நிறைவடைகிறது. இரண்டாம் நாள் ஆனையோட்டத்திலிருந்து ஆரம்பித்து உற்சவம் நிறைவடையும் நாள்  வரை நாள்தோறும் கோவிலுக்கு வரும் சுமார் இருபதாயிரம் பேருக்கு கோவிலின் ஊட்டுப்புரையில் (உணவுக் கூடம்) பிரசாத ஊட்டு என கஞ்சியும் புழுக்கும் வயிறு நிறைய அளிக்கப்படும். இதற்காக இந்த பத்து நாளும் அங்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள். இந்த பத்து நாளில் வருகிற அனைத்து பக்தர்களுக்கும் வயிறார காலைநேரக் கஞ்சி தயாரிக்க மூவாயிரம் முதல் நான்காயிரம் கிலோ புழுங்கலரிசி உபயோகிக்கப்படும். இரவு உணவுக்கும் இதே அளவு அரிசி உபயோகிக்கப்படும். இந்த பத்துநாளில் உப்பு மட்டும் இரண்டாயிரத்து ஐநூறு கிலோவும், நூற்றுக் கணக்கான கிலோ. மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, ஏழாயிரம் கிலோ வெளிச்செண்ணெய், ஒன்பதாயிரம் கிலோ பப்படம், இருபதாயிரம் கிலோவுக்கு மேல் தயிர், ஆயிரக்கணக்கான கிலோ பூசணி, பத்தாயிரம் கிலோ வரை வெள்ளைப் பூசணி, இரண்டாயிரம் கிலோவுக்கு மேல் வெள்ளரிக்காய் ஐந்தாயிரம் கிலோ வெல்லம், பதினைந்தாயிரம் தேங்காய், சமைக்க உதவும் விறகு மட்டும் ஒன்றரை லட்சம் கிலோ லட்சக்கணக்கான வாழையிலைகள் என இப்படி மலைக்க வைக்கும் அளவுக்கு அந்த பத்து நாளில் உபயோகிக்கப்படும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு புகழ்மிக்க உற்சவத்தில் எதனால் பக்தர்களுக்கு கஞ்சியும் புழுக்கும் அளிக்கப்படுகிறது என்று யோசித்தால் அதற்கும் காரணமுள்ளது. மகாபாரதத்தில் விதுரர் வீட்டுக்கு வரும் பகவான் கிருஷ்ணருக்கு விதுரர் அன்போடு அரிசிக் கஞ்சி தயாரித்து அளிக்க அவரும் அதை மிகவும் பிரியமாக உண்டு ரசித்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் கஞ்சி பிரசாதமாக அளிக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. சரி. இனி இந்த பிரசாதக் கஞ்சியும், புழுக்கும் எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம். இங்கு உற்சவ சமயத்தில் அளிக்கப்படும்  இரவு உணவில் சாதத்திலூற்றி சாப்பிடக் கொடுக்கப்படும் காளன் பற்றி ஏற்கனவே விருந்து சமையலில் கூறியிருக்கிறேன்.

126)  உற்சவக் கஞ்சி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி.- ஒரு கோப்பை (முழுதாகவும் இருக்கலாம் உடைத்த நொய்யாகவும் இருக்கலாம்)

தண்ணீர் – ஆறு கோப்பை 

உப்பு தேவையான அளவு

அரிசியைக் களைந்து ஒன்றுக்கு ஆறு என்ற அளவில் நீர் விட்டு தேவையான உப்பும் போட்டு குக்கரில் வைத்து ஏழெட்டு சவுண்டு விடவும். (விருப்பமுள்ளவர்கள் அதில் சுக்கு தட்டி போட்டுக் கொள்ளலாம்)

127)  புழுக்கு.

பொதுவாக புழுக்கு செய்ய கிழங்கு வகைகளும், ஊறவைத்த பயறு, காராமணி, கடலை போன்றவற்றையும் சேர்த்து செய்தால் அவற்றின் சுவை கூடும். காய்வாட்டாக உள்ள சக்கையிலும் புழுக்கு செய்யலாம். மரச்சீனி கிழங்கு எனப்படும் மரவள்ளி கிழங்கில் செய்யப்படும் புழுக்கு தனி சுவை கொண்டதாக இருக்கும். தவிர, சேனை, சேம்பு, கூர்க்கங்கிழங்கு, காவத்தங் கிழங்கு, பிடிகருணை இவையும் நன்றாக இருக்கும். தனிக்காயிலும் செய்யலாம். பல காய் சேர்த்தும் செய்யலாம். எதில் செய்தாலும் செய்முறை ஒன்றுதான். கிழங்கு வகைகள் வேண்டாம் எனத் தோன்றினால், மத்தன் (மஞ்சள் பூசணி), வாழைக்காய், கொள்ளு அல்லது காராமணி, அல்லது கொண்டைக்கடலை சேர்த்தும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

மரவள்ளி கிழங்கு (கப்பக் கிழங்கு) – நறுக்கிய துண்டுகள் ஒரு கோப்பை

தோல் நீக்கிய சேப்பங்கிழங்கு  – ஒரு கோப்பை

நேந்திரங்காய் – ஒன்று

சேனை – நறுக்கியது ஒரு கோப்பை

வெள்ளை காராமணி – 100 gm

தேங்காய் துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

வெளிச்செண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கிழங்கு வகைகளை நன்கு கழுவி அவற்றையும், ஊறவைத்த காராமணியையும் குக்கரில் தனித்தனி தட்டுகளில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நறுக்கிய நேந்திரங்காய்த் துண்டுகள், மற்றும் சேனையை கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு வேக விடவும்.

வாணலியில் உள்ள சேனை, மற்றும் வாழைக்காய் நன்கு வெந்ததும், குக்கரில் வேக வைத்தவைகளையும் எடுத்து வாணலிக் காய்களோடு சேர்த்து, தேவையான உப்பு போட்டு கிளறி விட்டு ஒன்றும் பாதியுமாக எல்லாவற்றையும் மசித்து விடவும். பிறகு துருவிய தேங்காயையும் ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெயும் அதனோடு சேர்த்து கலந்து விடவும்.

தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் வெளிச்செண்ணெய்  ஊற்றி அது சுட்டதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, தாளித்து அதில் சேர்த்து கலக்கவும்.

நீர் சத்து நிறைந்த கஞ்சிக்கு இந்த கெட்டியான புழுக்கும், ஏதேனும் ஊறுகாயும் தொட்டு சாப்பிட வேண்டும்.

விரத நாட்களில் இந்த புழுக்கில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்க்க மாட்டார்கள். ஆனால் சாதாரண நாட்களில் இந்த புழுக்கில் சாம்பார் வெங்காயம் ஏழெட்டு, நாலு பூண்டு இவற்றையும் கூட பொடியாக நறுக்கி தாளிப்பில் போட்டு வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக கேரளத்தில் கற்கடக மாசம் என்று அழைக்கப்படும், கார்த்திகை மாதத்தில் விரதமிருப்பவர்கள் பெரும்பாலும் இரவு நேரம் கஞ்சியும் அதற்குத் தொட்டுக்கொள்ள புழுக்கோ அல்லது மொளகூஷ்யமோ செய்து கொள்வார்கள். இதுவரை நாம் கஞ்சியோடு சேர்த்து சாப்பிடும் புழுக்கு பற்றி பார்த்தோம். இனி மொளகூஷ்ய வகை பற்றியும் பார்ப்போம்.

128)  பயறு மொளகூஷ்யம்:

தேவையான பொருட்கள்

வெள்ளைப் பயறு எனப்படும் வெள்ளை காராமணி – நூறு கிராம் (ஊறவைத்துக் கொள்ளவும். அல்லது வறுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நீர் விட்டு குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம். 

நேந்திரங்காய் அல்லது வாழைக்காய் – ஒன்று (பிஞ்சு வாழைக்காய் எனில் தோலோடு கூட நறுக்கிக் கொள்ளலாம். மற்றது எனில் தோல் சீவி சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளலாம்.

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மிளகுப்பொடி – ஒரு ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயை  நறுக்கி ஒரு வாணலியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வாழைக்காய் வெந்ததும், குக்கரில்வேக வைத்திருக்கும் காராமணியும் வாழைக்காயோடு சேர்த்துப் போட்டு ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஒரு ஸ்பூன் மிளகுப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு அங்கு கொதிக்க விடவும். நன்கு கொத்தி வந்ததும் காராமணி, வாழைக்காய் இரண்டையும் குழிக் கரண்டியால்  ஒண்ணும் பாதியுமாக உடைத்து நசுக்கி விடவும். இதை நீர்க்கவும் செய்யலாம். கொஞ்சம் கெட்டியாகவும் செய்யலாம். நன்கு வற்றவிட்டால் இறுகி கெட்டியாகும். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட என்றால் கொஞ்சம் நீர்க்க இருக்கலாம். கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள என்றால் கொஞ்சம் கெட்டியாக  இருக்கலாம். கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு வெளிச்செண்ணெயும் மேலே விடலாம். தாளிப்பெல்லாம் தேவையில்லை இதற்கு.

129)  சேம்பு மொளகூஷ்யம்

தேவையானவை

அரை கிலோ சேப்பங்கிழங்கு.

ஒரு ஸ்பூன், மிளகுப் பொடி,

ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி

உப்பு தேவையான அளவு

கறிவேப்பிலை ஒரு கொத்து

வெளிச்செண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

சேப்பங்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்துக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிக் கொண்டு வாணலியில் சிறிது வெளிச்செண்ணெய் விட்டு நறுக்கிய கிழங்கைப் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.  நடுவே கிழங்கைக் கொஞ்சம் ஒன்றும் பாதியுமாக மசித்து விட்டால் கொதித்து வற்றி இறுகி ஒரு கெட்டியான கூட்டுமாதிரி ஆகி விடும். கடைசியில் கொஞ்சம் வெளிச்செண்ணெயும் கறிவேப்பிலையும் சேர்க்கலாம். இதுவும் கஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள ஒரு சூப்பரான சைடு டிஷ்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com