21. சிறுவர்களில் வரும் முதுகுவலி

இந்த வாரம் குறிப்பிட்ட காரணங்களினால் வரும் முதுகு வலியின் ஒரு வகையான சிறுவர்களில் வரும் முதுகு வலியைப் பற்றி பார்ப்போம்
21. சிறுவர்களில் வரும் முதுகுவலி

இந்த வாரம் குறிப்பிட்ட காரணங்களினால் வரும் முதுகுவலியின் ஒரு வகையான சிறுவர்களில் வரும் முதுகுவலியைப் பற்றி பார்ப்போம்

சிறுவர்களில் முதுகுவலி:

சிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி? என்று யோசிக்கிறீர்கள்தானே! ஆம்... இப்போது எல்லாம்  சிறுவர்கள் கூட முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான். நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதைக் காணலாம்.

புத்தகப் பைகளால் முதுகுவலி:

சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை/முதுகுப் பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமான முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல் முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகில் இருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமை இழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.

முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில்  கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.

அலைபேசி, டிவி , கம்ப்யூட்டரால் வரும் முதுகு வலி:

இன்றைய தேதியில் பிறந்த குழந்தையை தாலாட்ட அம்மாவை விட அலைபேசியே முக்கியம் என்ற நிலை. உங்களுக்கே தெரியும் உங்கள் குழந்தைகளின் ஒரு நாளில் எவ்வளவு நேரம் அலைபேசியில் கார்ட்டூன் விடியோக்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. அவ்வாறு அவர்கள் விடியோக்கள் பார்க்கும் போது எப்படி உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவனியுங்கள். சிறுவர்கள் மணிக்கணக்கில் இந்த மின்னணு உபகாரணங்களுக்கு முன் அமரும் போது கூனல் தோற்றத்தில் அல்லது முதுகு குனிதல்போக்கில் உட்காராத் தொடங்குகின்றனர்.

இதனால் கீழ்முதுகுப் பகுதியில் அமைந்துள்ள உடலுக்கு அடிப்படையாய் (Foundation) இருக்கும் தசைகள் நாளடைவில் வலிமையிழந்து வலிமையற்றதாகின்றன. இது உடலில் உள்ள சமநிலையை பாதித்து சமமின்மையை உருவாக்குகின்றது. நம்முடைய உடல் ஒரு சங்கிலி போல, ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் கூட அது உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கிறது. அதுவும் சிறுவர்கள் உடல் இவ்வயதில் தான் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆனால் நீண்ட நேரம் தவறாக உட்காருவதால் நடுமுதுகில் கூன் உண்டாக்குகின்றது. இதனால் ஒட்டு மொத்த உடல் அமைப்பே பாதிக்கப்படுகிறது.

வைட்டமின் D குறைபாடு:

இந்நாளில் நாம் அனைவரும் சூரியனைப் பார்ப்பதே இல்லை. சூரியன் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் 2-6 வயது மிக முக்கிய காலம். குறிப்பிட்ட காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்க வேண்டும். அதில் இன்றைய நாட்களில் மிக முக்கியமான ஒன்று வைட்டமின் D. வைட்டமின் D எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அது பெருமளவில் இருப்பது சூரியனில் மட்டுமே. ஆனால் நம் குழந்தைகளோ அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மிக சிறு வயதிலேயே வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் தசைகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்ககாததால் அவை வலிமை இழந்து முதுகு வலி ஏற்பட காரணமாய் இருக்கின்றன. எனவே உங்கள் குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா என்னை சோதனை செய்து அதற்கு தேவையான துணை மருந்துகளை (Supplements) எடுத்து கொள்வதின் மூலம் முதுகு வழியை குறைக்கலாம்.

மிக முக்கியமாக உங்கள் குழந்தைகளை சூரியனில் விளையாட அனுப்புங்கள். மாலை சூரிய வெயில் வைட்டமின் D நிறைந்தது.

பொருந்தாத விளையாட்டுகளில் வரும் முதுகு வலி:

ஒவ்வொரு குழந்தையும் ஏதுனும் ஒரு விளாயாட்டை விளையாட விரும்புகின்றனர் அல்லது பெற்றோர்களால் கட்டாய படுத்தப்படுகின்றனர். பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள்  விளையாடுவதால் நல்ல உடல் வலிமையையும், உடல் உறுதியும் பெறுவார்கள் என எண்ணுகின்றனர். ஆனால் ஒரு விளையாட்டு விளையாடுவதற்கு முன்னர் அதற்கேற்ற உடல் வலிமையும், அவ்விளையாட்டை விளையாட உடல் உறுதியும் குழந்தைகளிடம் உள்ளதா என்று எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றனர். தவறான விளையாட்டையோ அல்லது  உடல் உறுதி அதிகம் தேவைப்படும்/கடுமையான விளையாட்டுகளையோ பெற்றோர்களின் வற்புறுத்தலால் முறையான பயிற்சியின்றி விளையாடுவதால் அழுத்த எலும்பு முறிவுகள் (Stress Fracture) குழந்தைகள் கீழ் முதுகில் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான எலும்பு முறிவு ஆகும்.

சிறுவர்களின் தசைகள் மேற்கூரிய காரணங்களினால் மிகவும் வலிமையற்றதாய் இருக்கும் நிலையில், எந்தவொரு விளையாட்டும் தசைகளின் வலிமையை இன்னும் மோசமாக்கி எலும்பு முறிவு ஏற்பட காரணமாய் அமைகிறது.

குழந்தைகள் விளையாடுவதே தவறு என்பது என்னுடைய கருத்து அல்ல. எந்தவொரு விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பே அதற்குரிய முறையான பயிற்சியும், சரியான உடல்வலிமையையும், சரியான வழி காட்டலும் மிகவும் அவசியம்.

முதுகு வலி தீர்க்க வழிகள்:

  1. சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான/குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  2. முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பினைக்க வேண்டும்.
  3. எல்லா நேரங்களிலும் நேராய்/ நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.
  4. அமர்ந்து கொடு படிக்கும்போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன் (Support) அமர வேண்டும்.
  5. எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
  6. விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.
  7. தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
  8. வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.
  9. முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.
  10. உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப பிசியோதெரபி மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com