அதிகாரம் - 12. நடுவு நிலைமை

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும்.
Published on
Updated on
1 min read

அதிகார விளக்கம்

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும். நல்லவை கெட்டவை நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகப் பார்த்துப் பழகும் தன்மைதான் பாராட்டப்படும்.

112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

நடுவுநிலையாளரின் செயல்களும், அதனால் விளைந்த பயன்களும், அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேரும் சிறப்பு வாய்ந்தது.

113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நன்மை ஏற்படும் என்றாலும், நடுவுநிலை தவறிய செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.

114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

ஒருவர் நடுவுநிலையுடன் செயல்படுகிறாரா இல்லையா என்பது அவரது உடல்மொழியிலும், செயல்களிலும் தெரிந்துவிடும்.

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

நல்லதும் கெட்டதும் நிலையில்லாதது என்று நினைத்து, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்படுவதே நல்லது என்று நினைப்பதே சான்றோர்க்கு அழகு.

116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

நடுவுநிலை தவறி செயல்பட்டால் தனக்கு அழிவு நேரிடும் என்பதை உணர்ந்துகொள்வது நல்லது.

117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலையோடு செயல்படுபவர் வறுமையில் இருந்தாலும், இந்த உலகம் அதை இழிவாக எண்ணாது.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள்போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோர்க்கு அழகு.

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

நடுவுநிலை தவறக்கூடாது என்ற எண்ணம் மனத்தில் இருந்தால், சொல்லிலும், செயலிலும் குறை நேராது.

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.

வியாபாரம் செய்பவர், தனக்கான பொருளாக நினைத்து பொருள்களை வாங்கி விற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com