சுடச்சுட

  
  temple44

   

  நம்முடைய முன்னோர்கள் கடன் வாங்கியிருந்து அதைக் கொடுக்காமல் இருந்து அது நமக்குத் தெரியவந்தால், நேர்மை உள்ளவர்களாக நாம் இருந்தால் அதைத் திருப்பிக் கொடுப்போம். இல்லையென்றால், எப்போதோ தெரியாமல் வாங்கிய கடன் என்று மறுத்துவிடுவோம். ஆனால், வரலாற்றுக் காலத்தில் அப்படி இல்லை. முன்னோர் வாங்கி அதற்கான காலம் கடந்திருந்தாலும்கூட, வழிவந்தோரிடம் விளக்கி அதன் வட்டியைக் கோயிலுக்குப் பெற்றுத் தந்த செய்தி கல்வெட்டில் விளக்கப்பெற்றிருக்கிறது.

  தஞ்சையை அடுத்த கரந்தையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் கருவறையின் தெற்குப் பகுதியில் ஒரு கல்வெட்டு அமைந்திருக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சுவாரசியமான தகவலைத் தருகிறது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோப்பரகேசரிவர்மரான ஒரு சோழ மன்னரின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. அதற்கு முன் ஆண்ட ஒரு இராசகேசரிவர்ம சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் சிவிகையார் சேரி என்னும் ஊரைச் சேர்ந்த பெண் பணியாளான பொய்யிலி என்பாள் தன் மகன் அரையன் வீரசோழன் என்பவன் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, விளக்கில் பாதி எரிக்கத் தேவையான காசைக் கொடுத்தாள். நசிவன் என்பவன் கொடுத்த பாதிக் காசைக் கொண்டும் ஒரு விளக்கெரிக்க முடிவு செய்திருந்தார்கள். அக்கோயிலில் பணி செய்த நந்தி ஏகம்பன், நந்தி அய்யாறன், ஊர் கிழான் சத்தி, பகைமதன் சத்ருகாலன் ஆகியோர் காசைப் பெற்று விளக்கெரிக்க இடையர் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். என்ன காரணத்தினாலோ அந்தச் செயல் இடையில் நின்றுபோனது. பிறகு பலகாலம் கழித்து கோயிலுக்கு ஸ்ரீகார்யம், அதாவது கோயில் கண்காணிப்பு அதிகாரியாக வந்தவர் ஆராய்ந்து அனைவரையும் அழைத்து கேட்டார். அப்போது காசு பெற்றவர்கள் இறந்துபோயிருந்தனர். அப்போது அவர்கள் வழிவந்த ஊர்கிழான் சத்தி, பகைமதன் சூற்றி, கணவதி சூற்றி ஆகியோரை அழைத்து முன்னோர்கள் நிறுத்தியமைக்குத் தண்டனையாக தொண்ணாற்றாறு ஆடுகளைத் தருமாறு ஆணையிட்ட செய்தி கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது.

  தேவருக்கிட்டுக் கொடுத்த முதலடையோலையும் அறுதிக்கேத்திட்டும் கட்டுத்து கோக்காட்டி காசுகொண்ட திருக்கோயிலுடையார்கள் செத்துப் போனமையில் அவர்களில் ஊர்கிழான் சத்தியும் பகைமதன் சூற்றியனையும் கணவதி சூற்றியனையும் இப்பரிசுவைத்தார் வைத்த தர்மத்தை கெடுத்து உங்கள் முதுக்கள் காசு கொண்டமையில் இதினுக்கு தண்டமாக இந்று முந்பு நின்ற இம்மூவரும் இவ்விளக்கு ஒன்றினால் ஆடு தொண்ணூற்றாறும் நீங்களே கொண்டு..

  என்பது கல்வெட்டுப் பகுதி.

  ஆக, முன்னோர்கள் பெற்ற கடனை மறந்து அவர்கள் இறந்துபட்டாலும், பின்னால் ஆராய்ந்த அதிகாரி அவர்தம் வழிவந்தாரைப் பிடித்து அவர்களிடம் தண்டனையை வசூலித்த செய்தி வரலாற்றின் வண்ணமாக எத்துனை எத்துனையோ வழிகளைக் காட்டி நிற்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai