51. ஒலித்த குரல்

சிலதெல்லாம் சொல்லிப் புரியவெக்க முடியாது வினய். தானா புரியும்னுகூட சொல்ல முடியாது. அதுக்கு முட்டி மோதணும். செருப்படி படணும். புத்திய நெருப்புல வாட்டி வறுத்து எடுக்கணும்.
Published on
Updated on
4 min read

பேருந்தைவிட்டு வழியில் இறங்கியிருந்ததை வினய் மறந்தே போனான். அதிர்ச்சியும் திகைப்புமாக அண்ணாவை நோக்கி ஓடினான். அவன் நெருங்கி வரும்வரை அண்ணா குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையிலேயே சிரித்துக்கொண்டிருந்தது வினய்க்கு வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியிருந்தது. ஒருவேளை அவன் பைத்தியமாகிவிட்டானோ?

‘டேய், இங்கயாடா இருக்கே? என்னடா பண்ற இங்கே?’ என்று வினய் அவனைப் பிடித்து உலுக்கியதற்கும் அவன் சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தான்.

‘கேக்கறேனே, பதில் சொல்லுடா! இங்க என்ன பண்றே?’

‘நீ என்ன பண்ணப்போறியோ அதான்’ என்று அண்ணா பதில் சொன்னான். வினய்க்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏண்டா இப்படி ஆயிட்டே? என்ன கோலம் இது? பெருமாளே.. நீ வா. வா சொல்றேன்’ என்று அவனை எழுப்பி இழுத்துக்கொண்டு போனான். ‘என்னோட காஞ்சீபுரத்துக்கு வந்துடறியா?’

அண்ணா இதற்கும் சிரித்தான்.

‘என்னடா ஆயிடுத்து ஒனக்கு? எதுக்கு இப்படி பைத்தியமா திரிஞ்சிண்டிருக்கே? அம்மா அப்பால்லாம் உன்னைக் காணாம எவ்ளோ கலங்கிப்போயிருக்கா தெரியுமா?’

‘இத்தனை வருஷம் கழிச்சுமா?’ என்று அண்ணா கேட்டான்.

‘முட்டாள். எத்தனை வருஷம் ஆனா என்னடா? பெத்த பிள்ளை இல்லாம போற துக்கம் உனக்கு எங்கே தெரியப் போறது?’

‘அப்படியா? உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? உனக்குக் கல்யாணமாகி குழந்தை பொறந்து காணாம போயிடுத்தா?’

வினய்க்குக் கடுமையாகக் கோபம் வந்தது. எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றே உணராமல் அண்ணாவைப் பளாரென அறைந்தான். ‘மரியாதையா என்னோட வா. முதல்ல நீ இங்கதான் இருக்கேன்னு அம்மாக்கு சொல்லணும். வா என்னோட’ என்று அவனை இழுத்துக்கொண்டு ஒரு டெலிபோன் பூத்துக்குச் சென்றான். அண்ணா முரண்டு பிடிக்கவில்லை. அவன் தன்னை அறைந்தது பற்றிய வருத்தமோ, கோபமோ உள்ளதாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை. இது இன்று நடந்தாக வேண்டும் என்ற விதியை அறிந்தவன் போல வினய் இழுத்த இழுப்புக்கு உடன் சென்றான்.

டெலிபோன் பூத்தில் வேறு யாரோ உள்ளே பேசிக்கொண்டிருந்ததால் வினய் சிறிது நேரம் காத்திருக்கும்படி ஆனது. எங்கே அதற்குள் அண்ணா தப்பித்துப் போய்விடுவானோ என்ற அச்சத்தில் அவன் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டே நின்றிருந்தான். ஆனால் அண்ணாவுக்குத் தப்பித்துச் செல்லும் உத்தேசம் இருப்பதாகவே தெரியவில்லை.

‘என்னதாண்டா ஆச்சு உனக்கு? ஏன் ஆத்தைவிட்டுப் போனே?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘அங்கே எனக்கு மூச்சு முட்டித்து வினய். அதான் வெளியே வந்தேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘கொன்னுடுவேன் நாயே. அம்மாவும் அப்பாவும் நம்ம நாலு பேர்மேல உசிரா இருக்கா. ஒரு வார்த்தை உன்னைக் கடிஞ்சி பேசியிருப்பாளா? ஒருவேளை உனக்கு சாதம் போடாம இருந்திருப்பாளா? என்னடா குறை வெச்சா? எல்லாம் நன்னாத்தானே இருந்தது? எல்லாம் சரியாத்தானே போயிண்டிருந்தது? திடீர்னு ஏன் இப்படி கிறுக்கு பிடிச்சிது உனக்கு?’ என்று வினய் மூச்சு விடாமல் திட்டினான்.

‘கிறுக்குத்தான் இல்லே?’ என்று கேட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். மீண்டும் அந்த அசட்டுச் சிரிப்பு. பைத்தியக்காரச் சிரிப்பு. அவன் பற்களெல்லாம் கறை படிந்து பார்க்கவே கண்றாவியாக இருந்தது வினய்க்கு. அண்ணா சலூனுக்குப் போவதையே முற்றிலும் நிறுத்திவிட்டிருந்தான்போல. முகமும் தலையும் காடாகியிருந்தது. புறங்கையிலும் பாதங்களின் மேற்புறமும் சொறி பிடித்தாற்போல வெள்ளை பூத்துக் கிடந்தது.

வினய்க்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. ‘ஏண்டா இப்படி ஆயிட்டே? சாப்பாட்டுக்கு என்னடா பண்றே?’ என்று கேட்டபோது அவன் கண்கள் கலங்கிவிட்டன.

‘அழாதே’ என்று அண்ணா சொன்னான். ‘அவர் போயிட்டார் பார். நீ அம்மாக்கு போன் பேசணும்னு சொன்னியே, பேசு.’

வினய் அவனை நம்பவே முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மாவிடம் பேச மறுப்பான், தன்னிடமிருந்து தப்பித்து ஓடத்தான் பார்ப்பான் என்று அவன் நினைத்திருந்தான். அவன் எண்ணியிருந்ததற்கு முற்றிலும் மாறாக அண்ணா எந்த எதிர்ப்பும் காட்டாமல் உடன் நின்றது அவனுக்கு மிகுந்த குழப்பத்தையும் வியப்பையும் அளித்தது.

‘பேசேன்?’ என்று அண்ணா மீண்டும் சொன்னான்.

வினய் கண்ணைத் துடைத்துக்கொண்டு பூத்துக்குள் நுழைந்து போனை எடுத்தான். இம்முறை அவன் பிடித்து இழுக்காமல் அண்ணாவே அவன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டது அவனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.

‘இதோ பார், நான் கூப்பிடறேன். ஆனா நீதான் பேசணும்’ என்று வினய் சொன்னான். அண்ணா சிரித்தான். ‘முதல்ல கூப்டு.’

பெட்டிக்குள் காசு போட்டு வினய் காத்திருந்தான். ஏழெட்டு முறை தொலைபேசி ஒலித்தபின் எதிர்முனையில் போனை எடுக்கும் சத்தம் கேட்டது.

‘அம்மா நான் வினய் பேசறேம்மா. இங்க வாலாஜாபாத்லேருந்து பேசறேம்மா. என்னோட கூட விஜய் இருக்காம்மா. அவன் இங்கதான் இருக்கான். நான் பாத்துட்டேம்மா’ என்று மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கும்வரை, அண்ணா அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘அம்மா, நான் பேசறது கேக்கறதா? விஜய்மா! இங்கதாம்மா இருக்கான்!’ என்று வினய் மீண்டும் சொன்னான்.

‘வினய், இன்னும் நீ ஏன் குழந்தையாவே இருக்கே?’ என்று எதிர்முனையில் கேட்ட குரல் அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. அது அம்மா இல்லை. அண்ணாவேதான்.

நம்பமுடியாமல் வினய் அண்ணாவைத் திரும்பிப் பார்த்தான். அவன் அங்கேதான் இருந்தான். வினய்யின் ஒரு கையைப் பிடித்துக்கொண்டுதான் நின்றிருந்தான். பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால் தொலைபேசிக்குள் அவனது குரல்தான் வினய்க்குக் கேட்டது.

‘டேய்...’ என்று வினய் அதிர்ச்சியடைந்தபோதும் அண்ணா வாய் திறக்கவில்லை. புன்னகைதான் செய்துகொண்டிருந்தான். ஆனால் தொலைபேசியில் அவன்தான் பேசிக்கொண்டிருந்தான்.

‘சிலதெல்லாம் சொல்லிப் புரியவெக்க முடியாது வினய். தானா புரியும்னுகூட சொல்ல முடியாது. அதுக்கு முட்டி மோதணும். செருப்படி படணும். புத்திய நெருப்புல வாட்டி வறுத்து எடுக்கணும். என்னமோ இன்னிக்கு உனக்கு இதைச் சொல்லணும்னு எனக்கு உத்தரவு ஆயிருக்கு, சொல்லிண்டிருக்கேன். கூடுமானவரைக்கும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன்?’

வினய்க்கு நெஞ்சொலியே நின்றுவிடும்போல் இருந்தது. அப்போதும் நம்பமுடியாமல் அம்மா, அம்மா என்றுதான் தொலைபேசியில் அழைத்துக்கொண்டிருந்தான். ஆனால் பார்வை விஜய்யின் மீதே இருந்தது. மிக நிச்சயமாக அண்ணா வாயைத் திறக்கவும் இல்லை; பேசவும் இல்லை. ஆனால் அவன் மனத்தின் ஓசை தொலைபேசி வழியே வினய்க்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

‘நீ ஆச்சரியப்படணும்னோ, அதிர்ச்சியாகணும்னோ நான் இதைப் பண்ணலைடா. சொன்னேனே.. எனக்கு இன்னிக்கு இது உத்தரவு. உனக்குச் சிலதைப் புரியவெக்கணும்.’

‘டேய்.. நீ பேயா? பேய் ஆயிட்டியாடா?’ என்று வினய் கேட்டான். ‘எப்படிடா இங்க நின்னுண்டு பேசறே? நான் அம்மாவுக்குத்தானே நம்பர் போட்டேன்?’

இப்போதும் நம்பமுடியாமல் வினய் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஒருமுறை வீட்டு எண்ணைச் சுழற்றினான். இன்னொரு ஒரு ரூபாய் நாணயத்தைப் பெட்டியில் போட்டுவிட்டுக் காத்திருந்தான். இம்முறையும் ரிங் போகும் சத்தம் கேட்டது. யாரோ எடுக்கும் சத்தமும் கேட்டது. ஆனால் குரல் அண்ணாவுடையதுதான். பேசியதும் அவன்தான். வினய் என்ன நினைத்தானோ. சட்டென்று அண்ணாவை இழுத்துப் பிடித்துத் தன் கையால் அவன் வாயை அழுத்திக்கொண்டு ‘அம்மா, நான் பேசறது கேக்கறதா?’ என்று கத்தினான்.

தொலைபேசியின் மறுமுனையில் அண்ணாதான் பேசினான். ‘இவ்ளோ சத்தம் எதுக்கு? மெதுவா பேசினாலே கேக்கும்.’

அவனுக்கு வெலவெலத்துப் போனது. தளர்ந்துபோய் போனை வைத்துவிட்டான். நம்பமுடியாமல் அண்ணாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘எப்படிடா?’

‘நியாயமா நான் இதையெல்லாம் பண்ணக் கூடாது. ஆனா என்ன சொன்னாலும் நீ அம்மாக்கு பேசத்தான் செய்வேன்னு அடம் பிடிப்பே. வேற வழியில்லாம பண்ணிட்டேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘என்னது? எதைப் பண்ணே?’

‘போனுக்குள்ள என் குரல்தானே கேட்டது?’

‘ஆமா. அது எப்படி?’

‘அதைத்தான் சொன்னேன். அதை நான் செஞ்சிருக்கக் கூடாது. அது மகா பாவம்.’

வினய்க்கு ஒரு கணம் கிறுகிறுத்துவிட்டது. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அண்ணாவின் காலில் விழுந்துவிடலாம் என்று நினைத்தான். சட்டென்று மனத்தை இழுத்துப் பிடித்து நிறுத்திக்கொண்டு, ‘இதோ பார், எனக்கு இதெல்லாம் புரியலை. புரியவும் வேணாம். நீ ஆத்துக்கு வரணும். இப்பவே என்னோட வரணும். இல்லேன்னா நான் கையோட உன்னை போலிஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துண்டு போயிடுவேன்’ என்று சொன்னான்.

அண்ணா சிரித்தான். ‘வா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். அவனைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற தீர்மானத்துடன், வினய் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு உடன் நடந்தான்.

‘நான் போயிடமாட்டேன் வினய். நீ பயப்பட வேணாம்.’

‘என்னடா ஆச்சு உனக்கு? எனக்கு ஒண்ணுமே புரியலியே.. பெருமாளே. எப்படி இதெல்லாம்?’

திரும்பத் திரும்ப அவன் அதையே கேட்டுக்கொண்டிருந்தான். அண்ணா பதில் சொல்லவில்லை. ஐந்து நிமிடங்கள் நடந்தபின் வாலாஜாபாத் காவல் நிலையம் வந்தது. அண்ணா நின்றான். ‘போலிஸ் உதவி கேப்பேன்னு சொன்னியே. போய்ச் சொல்லு. நான் இங்கயே நிக்கறேன். இல்லேன்னா நானும் உள்ள வரேன்’ என்று சொன்னான்.

வினய்க்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதிர்ச்சியா, வியப்பா, பரவசமா என்று புரியாதநிலையில், அவன் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்தது. அண்ணா நெடுநேரம் அவனை வெறுமனே உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு, வினய்யின் நடு நெற்றியில் தனது கட்டைவிரலை வைத்து அழுத்தினான். ‘கொஞ்சம் உயிர் போற மாதிரி இருக்கும். பயந்துடாதே. ஆனா போகாது’ என்று சொன்னான்.

அடுத்தக் கணம் வினய்யின் உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடித்ததுபோல் இருந்தது. தலைக்குள்ளே இருந்த உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து கீழே விழுவதுபோலத் தோன்றியது. இதயத் துடிப்பு பலநூறு மடங்கு அதிகரித்து, கால்கள் நிற்கமுடியாத அளவுக்கு உதறலெடுத்தது. அது ஒரு கணமா ஒரு மணி நேரமா என்று அவனுக்குத் தெரியவில்லை. தடாலென்று சரிந்து கீழே விழுந்தான்.

‘கண்ணு முழிச்சிப் பாத்தப்போ, நான் வரதர் கோயில் புஷ்கரணிக் கரைல இருந்தேண்டா’ என்று வினய் சொன்னான்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com