Enable Javscript for better performance
48. லக்ஷ்மி கடாட்சம்- Dinamani

சுடச்சுட

  

   

  எனக்கு அரசியல் தெரியாது. எனக்கு எதுதான் தெரியும்? தெரியாதவற்றின் பூரணத்தில் திளைப்பவன் நான். முப்பது வயது வரை எனக்கு அந்தப் பதற்றம் இருந்தது. ஒன்றும் அறியாதிருப்பது பற்றிய தவிப்பு. அல்லது அனைத்திலும் மிதமானவற்றுக்கு மேலே தெரியாதிருப்பது குறித்த கவலை. குருநாதரோடு இருந்த காலத்தில் இதைப் பற்றி ஓரிரு முறை அவருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவர் புன்னகை செய்வார். ‘மனத்தை ஏன் ஒரு குப்பை லாரி ஆக்கிக்கொள்ள விரும்புகிறாய்?’ என்று கேட்பார்.

  ‘முற்றிலும் பெருக்கித் துடைத்து காலியாக வைக்க வழியில்லாதபோது, குப்பை லாரியாக இருப்பதுதான் சௌகரியம்’ என்று பதில் சொல்வேன். ‘யாரும் கிட்டே நெருங்க அஞ்சுவார்கள் பாருங்கள்? கழிவு நீர் ஊர்தியாக இருப்பது இன்னும் வசதி.’

  அந்த வருடம் குடகில் வரலாறு காணாத மழை பெய்தது. ஒன்பது நாள்களுக்கு இருப்பிடத்தைவிட்டு வெளியே வரக்கூட முடியாத அளவுக்கு மழை. பல இடங்களில் மலைச்சரிவு உண்டாகி பாதை தடைபட்டுப் போயிருந்தது. காவிரி ஊழிப் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்வதாகச் சொன்னார்கள். தொலைத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, வழக்கமாக ஆசிரமத்துக்கு வருகிறவர்கள்கூட வராத சூழலில் நாங்கள் கட்டாயமாகச் சிறை வைக்கப்பட்டதுபோல உணர்ந்தோம். ஆசிரமத்தில் இன்னொரு நாலைந்து தினங்களுக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. ஆனால் குளித்து, துணி மாற்றத்தான் வழியில்லாதிருந்தது. மாணவர்களிடம் மூன்று ஜோடி உடைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று குரு சொல்லியிருந்தார். அவரிடம் இரண்டு உடுப்புகள் மட்டுமே இருந்தன. அனைத்துமே நனைந்து ஈரமாகிவிட்டிருந்தன. ஒன்பது நாள்களும் அவை கொடியில் தொங்கிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் உலரவேயில்லை. இதனாலேயே மழை விட்ட நிமிடங்களில் வெளியே போக நினைத்தாலும் முடியாமல் இருந்தது. நாங்கள் நாளெல்லாம் கம்பளியைச் சுற்றிக்கொண்டு அறைகளில் சுருண்டு கிடக்கும்படியாகிப்போனது.

  அன்றைக்கு நான் மதியம் தூங்கிவிடுவது என்று முடிவெடுத்து, இரண்டு குவளைகள் வெந்நீர் மட்டும் குடித்துவிட்டுப் படுத்திருந்தேன். உறக்கத்தின் விளிம்புக்குச் சென்றடைந்த நேரம், குரு என் அறைக்குள் நுழைந்தார். ‘விமல், நாம் வெளியே போகலாம்’ என்று சொன்னார்.

  நான் சற்றுத் தயங்கினேன். ‘இதுவும் நனைந்துவிடும் என்று அஞ்சாதே. வேறு வாங்கித் தருகிறேன் வா’ என்று சொன்னார்.

  ‘அதுசரி, கடைகள் ஏது இப்போது?’

  ‘பார்த்துக்கொள்ளலாம் வா’ என்று சொன்னார்.

  நாங்கள் இருவரும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். நகரம் முற்றிலும் நனைந்து விரைத்துப் போயிருந்தது. வீடுகளின் சுவர்களெல்லாம் நிறம் அழிந்து பழுப்பாகத் தெரிந்தன. வழியெங்கும் அத்தனை மரங்களில் இருந்தும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. தரையெல்லாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மரக்கிளைகள் விழுந்திருந்தன. மண் சரிவால் பாதை முழுதும் சேறாகி, சோற்றுருண்டைகள் போலச் சரளைக் கற்கள் செம்மை பூசிப் பரவிக் கிடந்தன. சாலையில் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பல கடைகள் மூடியிருந்தன. மூடிய கடைகளின் வெளியே நாய்கள் படுத்திருந்தன. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர போக்குவரத்து அறவே இல்லாது போயிருந்தது.

  ‘ஊரின் இந்த முகம் நன்றாக இருக்கிறது இல்லையா?’ என்று குரு கேட்டார்.

  ‘ஆம். ஆனால் இது போரடித்துவிடும். நகரின் அழகு மனிதர்களால் வருவது’ என்று சொன்னேன்.

  ‘அப்படியா நினைக்கிறாய்? இயற்கைக்கு இரண்டாவது இடம்தானா?’

  ‘இரண்டாவது இடம் சத்தத்துக்கு. அடுத்த இடம் குப்பைகளுக்கும் புழுதிக்கும்.’

  ‘அப்படியானால், ஆசிரமத்தை நாம் பெங்களூருக்கோ மைசூருக்கோ மாற்றினால் நீ வருத்தப்படமாட்டாய் என்று நினைக்கிறேன்.’

  ஒரு கணம் யோசித்தேன். எனக்கு மடிகேரியை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அது நகரமில்லை. கிராமாந்திரம் என்றும் சொல்லிவிட முடியாது. கூப்பிடு தொலைவில் காவிரி ஊற்றெடுத்துப் பொங்கிக்கொண்டிருக்கும் இடம். மாலை ஐந்து மணியானால் எங்கும் யாரும் தென்படமாட்டார்கள். இருட்டத் தொடங்கும் நேரம் மலைப்பாதையில் மேலே ஏறிப்போவது ஓர் அனுபவம். திரும்ப முடியுமா என்று சந்தேகம் வரும் எல்லைவரை நடந்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வருவது இன்னொரு பேரனுபவம். ஆனாலும் அந்த அமைதியும் சாந்நித்தியமும் அல்ல; பகலின் சந்தடியும் இணைவதாலேயே எனக்கு அந்த ஊரைப் பிடித்தது. மைசூரிலோ பெங்களூரிலோ சத்தத்துக்குக் குறைவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் சத்தம் சௌந்தர்யத்துடன் சேரும்போதல்லவா ரசனைக்குரியதாகிறது?

  ‘ஆம். ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி அதில் உள்ளது’ என்று குரு சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. அவர் அந்தப் பேச்சை எடுக்கக் காரணமே, பாதி தெரிந்தவனாக இருப்பது பற்றிய குற்ற உணர்ச்சியை நான் வெளிப்படுத்தியதுதான். நான் புன்னகை செய்தேன். ‘புரிந்தது குருஜி’ என்று சொன்னேன்.

  ‘விமல், பாதி அறிந்திருப்பது ஓர் அழகு. உலகில் பாதிக்கு உள்ள மதிப்பு முழுமைக்கு இல்லை.’

  ‘அப்படியா நினைக்கிறீர்கள்?’

  ‘பாதிக்கு உள்ள சௌகரியத்தில் பாதிகூட முழுமைக்குக் கிடையாது. மூச்சு முட்டத் தின்றுவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னை நான் அரை வயிற்று உணவுக்குப் பழக்கியிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார். உன் உற்சாகம் அதனால் வருவது.’

  ‘அட ஆமாம். ஆனால் நிறைகுடம்தான் தளும்பாது என்பார்கள்.’

  ‘தளும்பாதிருப்பதில் என்ன அழகு? ஒரு பெண் குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்போது உற்றுப் பார். குடம் தளும்பி நீர் வெளியே தெறித்தால், அந்தப் பெண் இன்னும் அழகாகத் தெரிவாள்.’

  நான் பேச்சற்றுப் போனேன். முக்கால் மணி நேரம் நடந்து காவிரி பாயும் வெளிக்கு வந்து சேர்ந்தோம். விரிந்த பெரும் படுக்கையில் ஆடை அவிழ்வது தெரியாமல் புரளும் ஒரு பெண்ணைப்போல் புரண்டோடிக்கொண்டிருந்தது நதி. ஓட்டத்தின் சத்தம் உற்சாகமளித்தது. நின்றிருந்த மழை மீண்டும் தூறலாகத் தொடங்கியிருந்தது. ‘குருஜி, நாம் முற்றிலும் நனைந்தபடிதான் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.

  ‘ஆம். ஈரத்துடன் போய்ச் சேருவோம்.’

  ‘குளிர் கொல்லப் போகிறது. படுத்தால் தூக்கம் வரப் போவதில்லை.’

  ‘ஆனால் களைப்பில் உனக்குப் பாதி உறக்கம் நிச்சயம் வந்துவிடும். உறக்கத்திலும் பாதிதான் அழகு’ என்று அவர் சொன்னார்.

  மிருதுளாவின் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. உண்மையில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதை மட்டுமே முக்கியமாக நினைத்தேன். பேசாத சொற்கள் உருவாக்கும் பிம்பம் மிகப் பெரிது. அறியாமையும் பூரண ஞானமும் ஒரு நூல் கண்டின் இருவேறு முனைகளல்லவா? ஆனாலும் கண்டாக உள்ளபோது இரண்டும் அருகருகேதான் குடியிருக்கும். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் உள்ள நெருக்கம் போல. ஒரு நாத்திகனைக் காட்டிலும் கடவுளை அதிகம் நினைப்பவன் யார்? இழுத்து இழுத்து மனத்தில் நிறுத்தி அவனை இல்லை என்று நிறுவுவதற்கு எத்தனைப் பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கிறது. மனம் குவியாத ஒரு நாம ஜபத்துக்கு நிகரானது அது.

  ‘உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்தத் தேர்தல் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

  நான் சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘முயற்சி பெரிதுதான். ஒருவேளை உங்கள் பெருங்கூட்டணி வெல்லலாம். ஆனால் ஆட்சி நீடிக்காது.’

  ‘அப்படியா?’

  ‘அப்படித்தான் தோன்றுகிறது. எதற்கும் அளந்து செலவு செய்யுங்கள்.’

  அவர் சற்றுப் பதற்றமானது போலத் தோன்றியது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தார். ‘என் பங்குக்கு நான் எழுபது கோடி செலவு செய்தாக வேண்டும். இதில் என் சொந்தப் பணம் மட்டும் நாற்பது கோடி. மிச்சம் உள்ளவை வசூலானவை’ என்று சொல்லி, ஒரு பெரிய பெட்டியைக் காட்டினார்.

  ‘திறந்து காட்டுவீர்களா?’ என்று சிரித்தபடி கேட்டேன். உண்மையில் நிறையப் பணம் என்பதை நான் அதுநாள் வரை கண்டதேயில்லை. அதன் அடர்த்தியையும் வாசனையையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு சன்னியாசி இதைக் கேட்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இத்தனைப் பணத்தில் எனக்கு ஒரு கட்டு கொடுங்கள் என்று நான் நிச்சயம் கேட்கப்போவதில்லை. அப்படிக் கேட்கக்கூடியவனாக என் தோற்றம் ஒருபோதும் என்னை முன்னிறுத்தாது என்பதை நானறிவேன்.

  அவர் யோசிக்கவில்லை. அறைக்கதவை மட்டும் எழுந்து சென்று தாழிட்டுவிட்டு வந்து பெட்டியைத் திறந்தார். பெட்டி என்றால் பெரிய கள்ளிப் பெட்டி. கனமானது. அதை நகர்த்துவதற்குச் சிறிதாக நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பெரிய பூட்டுப் போட்டு பூட்டியிருந்தார். பீரோவைத் திறந்து ஒரு சாவியை எடுத்து வந்து அந்தப் பூட்டைத் திறந்தார். முப்பது கோடி ரூபாய். பெரும்பாலும் நூறு ரூபாய்க் கட்டுகளாகவே இருந்தன. ஒரு சில ஐம்பது ரூபாய்க் கட்டுகளும் இருக்கலாம். சுருணைத் துணி சொருகி வைத்தாற்போலப் பெட்டிக்குள் ஓர் ஒழுங்கில்லாமல் மொத்தமாகத் திணித்திருந்தார்கள். நான் பெட்டியை மூடினேன். அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன்.

  ‘என்ன?’ என்று கேட்டார்.

  ‘செலவுக்கு இந்தப் பணம் போதும். உங்கள் சொந்தப் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்’ என்று சொன்னேன்.

  ‘அது எப்படி முடியும்? இதெல்லாம் செய்தே தீர வேண்டிய செலவுகள். சேர்த்து அப்புறம் எடுத்துவிடலாம் என்று வையுங்கள். ஆனாலும்...’

  ‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். இந்தப் பணத்தை நான் எடுத்துப் போகிறேன். இது உங்கள் கைக்கு வரவேயில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தைச் செலவு செய்து முடித்துவிட்டு, அதற்குமேல் தேவைப்பட்டால் என்னிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

  ‘நீங்களா?’

  ‘ஆம். எனக்குச் செலவு கிடையாது. இந்தத் தாள்களால் எனக்குப் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் வென்று நீங்கள் நினைத்தபடி ஒரு கூட்டாட்சி அமைத்து ஒரு மாதத்தில் அது கலைந்தபின் ஒரு வெறுமை வரும் பாருங்கள், அப்போது என்னிடம் வந்தால் இதைக் கொடுத்து அந்த வெறுமையைப் போக்குவேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

  அந்தச் சந்திப்பு அவருக்குப் பெரிய உற்சாகத்தை அளித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிருதுளாவின் விருப்பத்தின் பேரில்தான் நான் அவள் வீட்டுக்குப் போனேன். வாசனையான பெண். வசதியானவளும்கூட. அன்பாக அழைக்கும்போது எனக்கு மறுக்கத் தோன்றாததால்தான் போனேன்.

  ஆனால் நானே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது அந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும். நான் நினைத்தபடிதான் அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. மிருதுளாவின் தந்தை ஆதரித்த கர்நாடக அரசியல்வாதி ஒருவர்தான் அந்தமுறை பிரதமரானார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. மிகச் சில தினங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்துபோனது.

  அதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு மிருதுளா என்னை மீண்டும் அவள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தாள். ‘அப்பா மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அவரை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை.’

  ‘நான் வரவில்லை. அவரை அழைத்து வா’ என்று சொன்னேன்.

  பத்து நாள் இடைவெளியில் மிருதுளா அவளது தந்தையை என் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தாள். அவர் என்னிடம் அளித்து, மறந்தே போயிருந்த அந்தப் பணப்பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்தேன். ‘நிறைய செலவு செய்திருப்பீர்கள். எல்லாமே இழப்புத்தான். ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இழப்பின் சதவீதம் குறைவு’ என்று சொன்னேன்.

  அவர் நம்பவில்லை. பெட்டியைத் திறந்து பார்த்து சிறிது நேரம் பேச்சற்றிருந்தார். பிறகு சொன்னார், ‘நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் ரேகைகூட இதில் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.’

  நான் புன்னகை செய்தேன்.

  மறுவாரமே நான் அவரோடு டெல்லிக்குப் போகவேண்டி இருந்தது. அது எனக்கு முதல் விமானப் பயணம். அசோகா ஓட்டலில் எனக்கு அவர் அறை ஏற்பாடு செய்திருந்தார். அது எனக்கு முதல் நட்சத்திர விடுதி வாசம். அடுத்த மூன்று தினங்களில் எனக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து அறிமுகமானார்கள். எனக்குத் தெரியாத அரசியலை நான் அவர்களிடம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

  ஊர் திரும்பியபோது, என்னையறியாமல் நான் ஏழெட்டுப் பேரின் நிதி ஆலோசகராகியிருந்தேன்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai