காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 10 வார்டுகளில் அடிப்படை வசதிகளைப் பெற தொல்லியல் துறையின் தடையில்லா கடிதத்தைப் பெறும்படி தமிழக அரசுத் துறைகள் கூறுவதால் குழப்பம் நிலவுகிறது. தங்கள் வசிப்பிடப் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்தக் கோரியும், தமிழக அரசுடன் சேர்ந்து பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் திருப்போரூரைச் சேர்ந்த சுமார் 35 பேர் தில்லி வந்துள்ளனர்.
இதன் விவரம்:
திருப்போரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பிரணவ மலையைச் சுற்றி, பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனப்படும் "முதுமக்கள் தாழி' இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறை ஆய்வில் தெரிய வந்தது.
அதையடுத்து, அந்த மலையைச் சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடம் கட்டவும், அப்பகுதியில் ஏற்கெனவே அமைந்துள்ள கட்டடங்களில் மாற்றம் செய்யவும், பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டப்படி தொல்லியல் துறை தடை விதித்தது.
100 மீட்டரில் இருந்து 300 மீட்டர் வரை அமைந்துள்ள பகுதியில் உள்ள கட்டடங்களில் மாற்றம் செய்யவோ, புனரமைக்கவோ வழிமுறைகளுக்கு உள்பட்டு விலக்கு அளிக்கலாம் என்றும் தொல்
லியல் துறை தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகள் கெடுபிடி: இந்நிலையில், தொல்லியல் துறை விதித்த கட்டுப்பாடு வரம்பை மீறி சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள குடியிருப்புகளில் மாற்றமோ, குடிநீர், மின்சார, கழிவுநீர் இணைப்போ பெற தொல்லியல் துறை தடையில்லா கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுத் துறைகள் கெடுபிடி விதிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் வசிக்கும் 10 வார்டுகளில்,
அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, திருப்போரூரைச் சேர்ந்த 35 பேர் தில்லி வந்துள்ளனர். தொல்லியல் துறை தலைமை இயக்குநர் பிரவீண் ஸ்ரீவஸ்தவாவை புதன்கிழமை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
குழப்பத்துக்கு தீர்வு வேண்டும்: அவரிடம் திருப்போரூர் டவுன் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் கூறியது: எங்கள் பகுதியில் "சிங்கில் ஃபேஸ்' மின்சார இணைப்பு கூட இல்லாத பல குடியிருப்புகள் உள்ளன.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டி மின் இணைப்பு வழங்க தமிழக மின்சார வாரியம் மறுக்கிறது.
டவுன் பஞ்சாயத்தில் 24 மணி நேர அரசு மருத்துவமனை உள்ளது. அதில் கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அறைக்கு இரண்டு ஆண்டுகளாக "மூன்று ஃபேஸ்' மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
ஓஎம்ஆர் சாலையில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு ஆரம்பநிலைப் பள்ளி உள்ளது. அதை புனரமைக்கவும் தொல்லியல் துறை தடையில்லா கடிதம் தர வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகம் கூறுகிறது.
எனவே, கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக தமிழக அரசுத் துறைகளுக்குத் தெரிவித்து, குழப்பத்துக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
திருப்போரூர்வாசிகளை காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் பி. விஸ்வநாதன், தொல்லியல் துறை தலைமை இயக்குநரிடம் அழைத்துச் சென்றார்.
"தினமணி' நிருபரிடம் அவர் கூறுகையில், "பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், முதுமக்கள் தாழியைச் சுற்றி 300 மீட்டருக்கு மேல்பட்ட பகுதியைத் தாண்டி சுமார் 60 ஏக்கர் அளவுக்கு தொல்லியல் துறை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசுடன் தொல்லியல் துறை பேசி தீர்வு காண வேண்டும்' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச்சிடம் பேசி உத்தரவாதம் பெற்ற பிறகே ஊர் திரும்புவதில் உறுதியாகவுள்ளதாக திருப்போரூர்வாசிகள் கூறினர்.
"ஆய்வு செய்ய நடவடிக்கை'
திருப்போரூர்வாசிகளின் முறையீடு குறித்து சென்னை வட்டார தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொல்லியல் துறை தலைமை இயக்குநர் பிரவீண் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இது தொடர்பாக, திருப்போரூர்வாசிகளிடம் அவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் விசாரிக்கவும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான அனுமதியை உள்ளூர் நிர்வாகமே வழங்கலாம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச் புதிய சாதனை!




