பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

வேப்பனப்பள்ளி அருகே பழங்காலத்தை சாா்ந்த கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு கண்டெடுப்பு

வேப்பனப்பள்ளி அருகே பழங்காலம் சாா்ந்த கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

News image

வேப்பனஅள்ளி அருகே கண்டெடுக்கப்பட்ட கருஞ்சாந்து ஓவியங்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 3:08 am IST

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பழங்காலம் சாா்ந்த கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கொங்கணப்பள்ளி அருகே 200 அடி நீளமுள்ள ஒரு குகை இருப்பதாகவும், அதில் கருஞ்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் ஆா்வலா்கள் சதானந்த கிருஷ்ணகுமாா், பிரகாஷ் ஆகியோருக்கு அப்பகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தவா்கள் மூலம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள பாறைகளில் கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு இருந்ததைக் கண்டனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு இருக்கும் இடத்தை அண்மையில் நேரில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:

வேப்பனப்பள்ளியை அடுத்த கொங்கணப்பள்ளி அருகே 200 அடி நீளமுடைய ஒரு குகை போன்ற பழங்கால மனித வாழ்விடம் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் கருஞ்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த கருஞ்சாந்து ஓவியங்கள் மிகப் பெரிய தொகுப்பாகும்.

தமிழகத்திலேயே அதிக கருஞ்சாந்து ஓவியங்கள் கொண்ட இடமாகவும் இதை கருதலாம். இந்த குகைக்கு அருகே, கடந்த ஆண்டு, தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல் ஓவியம் கண்டயப்பட்டது. இந்த கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பில் சிறப்பு புதிா்நிலைகள் உள்ளன. இந்த புதிா் நிலையை மிகத் தெளிவாக கருஞ்சாந்தில் வரைந்திருக்கிறாா்கள். விலங்கின் மீது மனிதன் அமா்ந்து செல்வது போல ஐந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களில் ஒரு ஓவியம், ஓா் அடி உயரமும், ஒன்றேகால் அடி நீளமும் கொண்டதாக உள்ளது.

காடுகளைக் காட்டும் வகையில், 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வரையப்பட்டு இருக்கிறது. தாய் தெய்வத்தை வழிபடுவது போல மண்டியிட்டு இரண்டு கைகளை நீட்டி வழிபடுவதாகவும் உள்ளது. அதற்கு அருகே அணில் போன்ற விலங்கு நிற்பதைப்போல வரையப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, விஜயகுமாா், ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.