வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பற்றாக்குறை! குடிநீர் விநியோகத்தில் நீடிக்கும் குறைபாடு

மூன்று குடிநீர்த் திட்டங்களை உள்ளடக்கி குடிநீர் விநியோகம் செய்யப்படும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில்,

News image
Updated On :15 டிசம்பர் 2012, 6:45 am

கே.கே.மணிகண்டன்

மூன்று குடிநீர்த் திட்டங்களை உள்ளடக்கி குடிநீர் விநியோகம் செய்யப்படும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில், தேவையான அளவில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் இல்லாததால் சீரான குடிநீர் விநியோகம் என்பது சாத்தியப்படாமல் உள்ளது.
 குடிநீருக்கான நீராதாரமற்ற திருப்பூர் நகருக்கு முதன்முதலாக 1932-இல் கோவில்வழி கிராம கிணற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை குடிநீர்த் தொட்டி மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதில் தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந் நிலையில், கிணற்றில் நீராதாரம் இல்லாததால் இத் திட்டம் நிறுத்தப்பட்டது.
 முதல் குடிநீர்த் திட்டம்: திருப்பூர் நகருக்கு 54 கி.மீ. தூரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு முதல் குடிநீர் திட்டம் 1961-இல் செயல்படுத்தப்பட்டது. கூட்டுக் குடிநீர் திட்டமான இதில் திருப்பூருக்கு 4.5 எம்.எல்.டி. குடிநீர் (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) தினமும் விநியோகிக்கப்படுகிறது. தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி வாயிலாக விநியோகம் செய்யப்படும் இத் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
 2-வது குடிநீர்த் திட்டம்: 1982 டிசம்பர் 12-ஆம் தேதி 2-வது குடிநீர்த் திட்டத்திற்கு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்டினார். குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் திருப்பூருக்கு தினமும் 22.5 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
 இத் திட்டத்தில் 7 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. அவிநாசி சாலை பாரதியார் வளாகம் (26 லட்சம் லிட்டர் கொள்ளளவு), குமார் நகர் (18 லட்சம் லிட்டர்), தாராபுரம் சாலை (5 லட்சம் லிட்டர்), பூச்சகாடு (10 லட்சம் லிட்டர்), ராயபுரம் (10 லட்சம் லிட்டர்), பெரிச்சிபாளையம் (4 லட்சம் லிட்டர்) என 6 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. தென்னம்பாளையத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி பழுதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது.
 மூன்றாவது குடிநீர்த் திட்டம்: இத் திட்டத்திற்கு 2002 ஜூன் 20-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக திருப்பூர் சாய ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும், குடிநீர் தேவைக்குமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.5 வீதம் மாநகராட்சியால் விலைக்கு வாங்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
 இத் திட்டத்தில் இப்போது 52 எம்.எல்.டி.க்கும் கூடுதலாக குடிநீர் பெறப்படுகிறது.
 மூன்றாவது குடிநீர்த் திட்டத்தில், புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மட்டும் மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டது. பிற இடங்களில் 2-வது திட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் உள்ள பகுதிகளில் தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் 3-வது திட்ட குடிநீரைத் தேக்கி, மோட்டார்கள் மூலமாக மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி விநியோகம் செய்யப்படுகிறது.
 மூன்றாவது திட்டத்தில் தேவையான அளவில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்படவில்லை. 2 மற்றும் 3-வது திட்ட குடிநீர் சுழற்சி முறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 15வேலம்பாளையம், நல்லூர் மற்றும் 8 ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்திற்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் போதுமானதாக இல்லை.
 மொத்தமாக 3 குடிநீர்த் திட்டங்களில் 83 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டாலும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை நீடிக்கிறது. சில பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறையும் சில பகுதிகளில் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடிய நிலை காணப்படுகிறது.
 அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக 2 மணி நேர குடிநீர் விநியோகம் என்பது முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. சில பகுதிகளுக்கு கவுன்சிலர்கள் தலையீடு காரணமாக கூடுதலாக விநியோகிப்பது, குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாவது, அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் லாரிகள் வாயிலாக அதிகளவு குடிநீரை எடுப்பது, வீட்டு இணைப்புகளுக்கு 100 அடி தூரத்துக்கும் கூடுதலாக இருந்தால் மட்டும் முக்கால் இஞ்ச் குழாய் அனுமதிக்கப்பட்ட நிலையில், 100 அடிக்கும் குறைவாக உள்ள வீடுகளுக்கும் முக்கால் இஞ்ச் குழாய் இணைப்பு வழங்குவது போன்ற காரணங்களால் குடிநீரைச் சீராக விநியோகிக்க இயலவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகளில் சில பழுதடைந்துள்ளதால், புதிதாக தொட்டிகள் கட்டப்பட வேண்டியது அவசியம்.
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் கூறியது:
 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் மூலமாக 2 மற்றும் 3-ஆவது திட்ட குடிநீரை சுழற்சி முறையில் விநியோகம் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. கூடுதலாக 24 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், 2 இஞ்ச் குடிநீர் குழாய்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான மாதிரி திட்ட மதிப்பீடு தயாரிக்க தனியார் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.