/

100ஆவது டெஸ்டில் சேவாக் சதமடிக்க வேண்டும்: கபில்தேவ், வெங்சர்க்கார் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், வெங்கசர்க்கார்

News image
Updated On :20 நவம்பர் 2012, 2:43 pm

ஏ.வி. பெருமாள்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், வெங்கசர்க்கார் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இது சேவாக்குக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

இந்த நிலையில் இது தொடர்பாக கபில்தேவ் கூறுகையில், "சேவாக்கைப் போன்று நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். சேவாக் போன்ற வீரர்களால்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க ரசிகர்களை ஈர்க்க முடியும். எனவே சேவாக் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

திலிப் வெங்சர்க்கார் கூறுகையில், "சேவாக் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். எப்போதுமே தனக்கே உரிய பாணியில் விளையாடிக்கூடியவர். சில நேரங்களில் பார்மில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் ஆக்ரோஷமாகவே களத்துக்குள் செல்வார். அவருடைய டெஸ்ட் சாதனைகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். சேவாக் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடிப்பார் என நம்புகிறேன்' என்றார்.

திராவிட், லட்சுமண் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், சேவாக் தனது பேட்டிங் பாணியை மாற்ற வேண்டுமா என்று கேட்டபோது, "தேவையில்லை. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்' என்றார் வெங்சர்க்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.