ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையில், மத்திய அரசுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட 19 இடங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சொகுசு கார் வாங்கியதில், வரி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதாக வந்த புகாரினை அடுத்து, சிபிஐ இந்த சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், சிபிஐ சோதனை குறித்து நாங்கள் கவலையடைந்தோம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
சிபிஐ சோதனை நடத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது. இது பற்றிய விவரங்களை ஆராய்ந்து வருகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகிய மூன்றாவது நாளிலேயே, ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் என்று நம்பப்படும் நிலையில், பிரதமர் இவ்விதமாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









