நவீனப்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்நாட்டு விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முனையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரே சூட்ட வேண்டும் என மத்திய அரசிடம் கோரி சட்டப்பேரவையில் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்துள்ளார். தற்போது, உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியால் சூட்டப்பட்டது. இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் தற்போது ரூ.2300 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிநவீன முனையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முனையம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த உடன் ஏற்கனவே உள்ள உள்நாட்டு விமான நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் நிலையே உள்ளது. எனவே விமான நிலையத்தின் நவீன முனையத்திற்கும் பெருந்தலைவர் காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும்.அதேபோல், தலைநகர் புதுதில்லியில் ஆசியாவின் 3-வது மிகப்பெரிய விமான நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிலையம் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அவர் பெயரே நீடிக்கிறது. அதேபோல், மும்பையில் சத்ரபதி சிவாஜி பெயரில் உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்ட பின்னரும் பழைய பெயரிலேயே செயல்பட்டு வருகிறது.இதேபோல், விரிவாக்கப்பட்ட சென்னை விமான முனையத்திற்கும் காமராஜர் பெயரே நீடிக்க உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சி விமான நிலையம் ரூ.100 கோடி செலவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட உத்தரவிட வேண்டும். அதேபோல், சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் நிலைப்பதன் மூலம் அவரது தியாகத்திற்கும், மக்கள் தொண்டுக்கும் நாம் பெருமை சேர்த்தாக அமையும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.