வீட்டில் இருந்த மான் தோல், துப்பாக்கி பறிமுதல்: உதவி வனப்பாதுகாவலர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நாகை மாவட்டத்தில் உதவி வனப்பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து
Updated on
1 min read

உதவி வனப்பாதுகாவலர் வீட்டில் இருந்த மான் தோல் மற்றும்  துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நாகை மாவட்டத்தில் உதவி வனப்பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி, கடந்த மாதம் 29-ம் தேதி சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்நிலையில் போலீஸார் வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை சுப்பிரமணியன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பணம், நகை, சொத்து ஆவணங்கள் முதலியவற்றை கைப்பற்றினர். மேலும் வீட்டில் உள்ள பீரோக்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மான் தோல்கள், கொம்புகள், பதப்படுத்தப்பட்ட காட்டு நாய் தலை, இரட்டை குழல் துப்பாக்கி, சந்தனக்கட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.சுப்பிரமணியன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சோதனையிடும்போது பணம், நகை, சொத்து ஆவணங்கள் சிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் போலீஸார் சோதனை தொடங்கியுள்ளனர். ஆனால் இங்கு வன விலங்குகளின் தோல்கள், துப்பாகிகள், சந்தன கட்டைகள் இருந்துள்ளதை பார்த்து போலீஸார், காலையில் தொடங்கி இரவு வரை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கேட்டபோது, நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இப்போது பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் வீட்டில் வைத்திருக்க கூடாது. வன சட்டங்கள் படி கடுமையான தண்டனை கிடைக்கும். விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்றார்.

இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரி வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சென்னையில் உள்ள அத்துறையின் உயர் அதிகாரிகள், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com