பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

படைப்பாளியிடம் சமூக அக்கரை குறைந்து வருகிறது: தோப்பில்முகம்மதுமீரான் வேதனை

படைப்பாளிகள் சமூக பிரச்னைகளில் இருந்து விலகி செல்லும் நிலை உள்ளது. காதல் கவிதை எழுவது மட்டும் படைப்பாளியின் வேலை அல்ல. சமூக அக்கரையுடன் படைப்புகள் இருக்க வேண்டும் என

News image
Updated On :16 டிசம்பர் 2013, 9:00 am

ஷேக் அப்துல்காதர்

படைப்பாளிகள் சமூக பிரச்னைகளில் இருந்து விலகி செல்லும் நிலை உள்ளது. காதல் கவிதை எழுவது மட்டும் படைப்பாளியின் வேலை அல்ல. சமூக அக்கரையுடன் படைப்புகள் இருக்க வேண்டும் என சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மதுமீரான் குறிப்பிட்டார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை, புதுக்கோட்டை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்காசி தென்பொதிகைத் தமிழ்ச் சங்கம், ஈரோடு ஆய்த எழுத்து பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் சார்பில் தமி்ழ் இலக்கியத்தில் களமும் கருத்தியலும் என்ற தலைப்பில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் பேராசிரியர் சொ. சுப்பையா தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் தொ. பரமசிவன் பேசியதாவது: தமிழ் இலக்கியங்கள் சமூகம் சார்ந்தவை. சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு உலக அரங்கில் மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. இலக்கியத்தில் புதிய பார்வை, பரிமானம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

புதிய கருத்தின் மூலம் பழமையை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் சார்ந்த, களம் சார்ந்த இலக்கியப் பார்வை தமிழ் பக்கம் திரும்பியுள்ளது. உலகின் முதல் அகராதி தொல்காப்பியம் என அமெரிக்க அறிஞர் குறிப்பிடுகிறார். தமிழ் இலக்கிய ஆய்வுகள் மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளன என்றார் அவர்.

சிங்கப்பூர் தேசியக் கல்வியியல்புலம் அமைப்பின் பேராசிரியர் ப. வேணுகோபால் பேசியதாவது: மேலைநாட்டு அறிஞர்கள் அவர் மொழியில் தமிழ் மொழியின் தொன்மையை ஆய்வு செய்து மொழியின் பெருமையை எழுதும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இதனை தமிழர்கள் உணர வேண்டும். வாழ்வியல்  இலக்கணத்தை கற்று தந்தது தமிழன்.  தமிழ் மொழியை மறக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்ய வேண்டும். தமிழர்கள் மொழிப்பற்றில் இருந்து விலகி செல்லக் கூடாது என்றார் அவர்.

சாகித்ய அகதாமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மதுமீரான் பேசியதாவது:

தமிழ் மொழில் உள்ள கருத்துக்கள் வேறு மொழியில் கிடையாது. தமிழ் நூல்களை பிற நாட்டினர் அதிகம் நேசிக்கிறார்கள். பழமையான நூல்களை ஆழமாக படித்து உணர்ந்து எழுதுகின்றனர். ஜெர்மன் நாட்டு அறிஞர் பழமையான தமிழ் நூல்களை ஆய்வு செய்துள்ளார். தமிழர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம்.

தமிழ் இலக்கியத்தில் புதிய பார்வை, புதிய ஆய்வு தேவைப்படுகிறது. பாரதியாரை ஒரு அளவுகோலாகதான் வைத்துள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். தாழ்வு மனப்பான்மையால் தமிழர்கள் பின்னோக்கி செல்லும் நிலை உள்ளது. காதல் கவிதை எழுதுவது மட்டும் படைப்பாளியின் பணி அல்ல. சமூக அக்கரையுடன் படைப்புகளை தர வேண்டும். சமூக பிரச்னைகளில் இருந்து படைப்பாளிகள் விலகி செல்லும் நிலை உள்ளது.

கூடங்குளம் அணுஉலையின் தீங்கு குறித்து யாரும் எழுதுவதில்லை. பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரவருணி தண்ணீர் வழங்கப்படுவதை படைப்பாளிகள் சுட்டிக்காட்டவில்லை. படைப்பாளிகள் சமூக அக்கரையில் இருந்து விலகி செல்லக்கூடாது என்றார் அவர்.

கருத்தரங்கில் சிங்கப்பூர் பாடத்திட்ட வரைவு அதிகாரி முனைவர் பொன். சசிக்குமார், இலங்கை எழுத்தாளர் அஷ்மத், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய பேராசிரியர் ஆர். விமலன், சிங்கப்பூர் நன்னியாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக முனைவர் சீதாலட்சுமி, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா மற்றும் இலங்கை, சிங்கப்பூரில் இருந்து தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஆ. மணி வரவேற்றார். முனைவர் இரா. பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.