

விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த மைசூர்-தூத்துக்குடி விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 லட்சம் மதிப்பிலான 10 பான்பராக் மூட்டைகளை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து, இந்த மூட்டைகள் யாரால் எங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூர்-தூத்துக்குடி பயணிகள் விரைவு ரயில் மதுரை வழியாக இன்று காலை 8.45 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது, ரயில் நி்ன்றதும் பயணிகள் இறங்கியதும், சரக்குகள் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் ஏறி கீழே இறக்கியுள்ளனர். அப்போது, குறிப்பிட்ட மூட்டைகளை அதற்கு உடையவர்கள் எடுத்துச் சென்ற நிலையில் 10 மூட்டைகள் ரயில்வே நடைமேடையில் கிடந்துள்ளது. அப்போது, அந்த மூட்டையில் முகவரி எழுதப்பட்ட பகுதியில் மதுரை என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக உடனே ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்பது குறித்து பிரித்து பார்த்த போது உள்ள பான்பராக் பாக்கெட்கள் இருந்துள்ளது.
இந்த மூட்டைகள் ஒவ்வொன்றும் தலா 58 கிலோ எடை கொண்டவையாகவும், சுமார் 4 லட்சம் மதிப்பிலான பொருள்களாக இருந்தது. மதுரையில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்றவைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மொத்த வியாபாரிகளின் குடோன்களிலும், சிறு வியாபாரிகளின் கடைகளிலும் அவ்வப்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தீவிரமாக ரெய்டு நடத்தி வருகின்றனர். அதேபோல், ரயில் நிலையத்திலும் ரெய்டு நடந்துள்ளது. அப்போது, எடுத்தால் பிரச்னை வரும் என கருதி, மூட்டைகளை இறக்காமல் விருதுநகரில் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று வியாபாரிகள் நினைத்திருக்கலாம் என ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த மூட்டைகள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கவிதாகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்து பான்பராக் மூட்டைகளை பாதுகாப்பாக எடுத்து சென்றனர். இதை அழிப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முடிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.