தில்லி போலீஸுக்கு பெண் ஆணையரை நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய உள்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
தில்லி போலீஸ் ஆணையர் நீரஜ் குமாரின் பதவிக் காலம் வரும் ஜூலை மாத இறுதியில் முடிவடைகிறது. இதையொட்டி, ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரியைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை மத்திய உள்துறை தொடங்கியுள்ளது.
புதிய ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கும் அதிகாரிகள் பட்டியலில் தில்லி போலீஸ் நிர்வாகப் பிரிவு சிறப்பு ஆணையர் பி.எஸ். பஸ்ஸி, திஹார் சிறைத் துறை தலைமை இயக்குநர் விம்லா மெஹ்ரா, தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணைப் பிரிவு தலைமை இயக்குநர் கன்வல்ஜித் தியோல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆணையர் நீரஜ் குமார் 1976-ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பிரிவைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தில்லி ஆணையராக பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து, நகர காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
வாரந்தோறும் போலீஸ்-மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள், சரக போலீஸ் துணை ஆணையர்களின் செல்போன் எண்களை இணையத்தில் வெளியிட்டு பொதுமக்கள் நேரடியாகப் புகாரைத் தெரிவிக்கும் வசதி, வடகிழக்கு மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் போன்றவை நீரஜ் குமார் தலைமையில் தில்லி போலீஸில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளாகும்.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற துணை மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீஸ் தவறி விட்டதாக பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, "மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள தில்லி போலீûஸ தில்லி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்' என்று முதல்வர் ஷீலா தீட்சித் கோரினார். ஆனால், அதை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே நிராகரித்தார்.
இந்த நிலையில், துணை மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்துக்குப் பிறகு நகர போலீஸ் ஆணையரை முதல்வர் ஷீலா தீட்சித் பொது மேடைகளில் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து, "நீரஜ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது அவரை நீக்க வேண்டும்' என்று ஷீலா தீட்சித்தும், சந்தீப் தீட்சித்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, முதல்வருக்கும் நகர போலீஸ் ஆணையருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், புதிய ஆணையர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளின் பட்டியலில் 1977-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த பஸ்ஸியின் (57) பெயர் முதலிடத்தில் பரீசிலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தில்லி போலீஸில் நீண்ட காலம் பணியாற்றி வரும் அனுபவம் இவருக்கு இருப்பதால் தலைநகரின் சட்டம் - ஒழுங்கு குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும் என்று மத்திய உள்துறை கருதுகிறது.
இதேபோல, 1977-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான கன்வல்ஜித் தியோல் (57) பெயரையும் மத்திய உள்துறை பரிசீலித்து வருகிறது. இவரது பதவிக் காலம் 2014, அக்டோபர் 31-ஆம் தேதி வரை உள்ளது.
2010-இல் அருணாசல பிரதேச போலீஸ் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய பிறகு, இவர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணைய இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் பெயரில் உள்ள விம்லா மெஹ்ரா (56), 1978-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். தில்லி போலீஸில் பாதுகாப்புப் பிரிவு சிறப்பு ஆணையராகப் பணியாற்றிய இவர், கடந்த ஆண்டு முதல் திஹார் சிறைத் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தலைநகரில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெறவும் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை ஆணையராக நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய உள்துறை தீவிரமாகப் பரீசீலித்து வருகிறது.
மேற்கண்ட மூன்று உயரதிகாரிகள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் அளிக்கும் கருத்தின் அடிப்படையில், புதிய ஆணையர் பெயரை அதிகாரப்பூர்வமாக மத்திய உள்துறை அடுத்த மாதம் தேர்வு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








