உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணி தீவிரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 60. இங்கு தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
மேலும் இங்கு பணியாற்றிய நீதிபதி டி.முருகேசன் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சி.நாகப்பன் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டனர். இவர்கள்தவிர மேலும் சில நீதிபதிகள் ஓய்வு பெற்றனர்.
இந்தச் சூழலில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால் மட்டுமே புதிதாக நியமிக்கப்பட்டார். வேறு நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை.
இதனால் ஏப்ரல் இறுதியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆகக் குறைந்தது. இந் நிலையில் நடப்பு மே மாதத்தில் மட்டும் மேலும் 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் மே இறுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்துவிடும்.
இந்தச் சூழலில் காலியாகவுள்ள நீதிபதி பதவியிடங்களை நிரப்பிடும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. தலைமை நீதிபதி உள்பட மூத்த நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு, 15 பேர் கொண்ட ஒரு பட்டியலை நீதிபதிகள் நியமனத்துக்காகத் தயாரித்துள்ளதாகவும், இந்தப் பட்டியல் உச்ச நீதிமன்ற தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பட்டியலில் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழக அரசு வழக்குரைஞர்கள் 2 பேர், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் நீதித் துறையில் பணியாற்றும் 2 பேர் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் 11 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களில் 2 பேர் பெண் வழக்குரைஞர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பின்புலங்கள் குறித்த தகவல்கள் மத்திய, மாநில அரசுகளின் உளவுத் துறைகள் மூலமாக சேகரிக்கப்படும்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்ச நீதிமன்ற தேர்வுக் குழுவானது பட்டியலில் உள்ள ஒவ்வொருவர் குறித்தும் ஆராய்ந்து அவரை நீதிபதியாக தேர்வு செய்வதா அல்லது அவரது பெயரை நிராகரிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும். பின்னர் இந்தப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசு மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். இறுதியாக குடியரசுத் தலைவர், நீதிபதி பணி நியமன ஆணையைப் பிறப்பிப்பார்.
சில நேரங்களில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்யும் பட்டியலில் சில மாற்றங்களைச் செய்யுமாறு மத்திய அரசு கோரலாம்.
இந்த நடைமுறைகளெல்லாம் விரைவிலேயே நிறைவு பெற்றால் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவியிடங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...