நூறு விழுக்காடு தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை: 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 10, 12 தேதிகளில் நடைபெற இருந்த நுழைவுத்தேர்வுகளின் தேதிகள் மாணவர்கள் நலன் கருதி மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக ஜூன் 7,8,9 தேதிகளில் நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு அண்ணாமலைநகரில் மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சென்னை, சேலம், திருநெல்வேலி, அண்ணாமலைநகர் ஆகிய 7 மையங்களில் நடத்தப்படுகிறது. மேற்காணும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மே.28-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே.28-க்குள் அளிக்க வேண்டும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நூறு விழுக்காடு தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்படும். பல்கலைக்கழகம் அறிவித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். தமிழகஅரசின் இடஒதுக்கீடு முறையில் அனுமதி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பிற்கு 5 ஆயிரம் பேர் சேருவதற்கு சிண்டிகேட் அனுமதி அளித்திருந்தது. இந்த ஆண்டு பல்கலைக்கழக கட்டமைப்பு வசதி படி 2500 முதல் 2800 வரை அனுமதி சேர்க்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் 100 இடங்களுக்கும், பி.பார்மா 100 இடங்களுக்கும் அனுமதி சேர்க்கை செய்யப்படும். இதுவரை பொறியியல், விவசாயம் சார்ந்த படிப்பிற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் 3898-ம், மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு விண்ணப்பங்கள் 1204-ம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவையல்லாமல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு இறக்கம் செய்து வரைவோலை இணைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.