கடலூர் மாவட்டத்தில் குவாரிகள் மூடப்பட்டதால் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக கட்டுமானத் தொழிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். குடிசைகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது.முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை வீடு திட்டத்தில் இம்மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளதோடு, தானே புயலில் பாதிக்கப்பட்ட இம்மாவட்ட மக்களுக்கு 90,000 வீடுகளை அரசே கட்டித் தரும் திட்டமும் செயல்பட்டு வருவதால், கட்டுமானப் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இதற்கான மணல் தேவையை பூர்த்தி செய்வதற்காக தென்பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா மற்றும் வெள்ளாறு ஆகிய நான்கு ஆறுகளில் லாரிகளுக்காக 6 குவாரிகளும், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களுக்காக 21 குவாரிகளும் அரசால் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. மாவட்ட தேவைகளுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் இப்பகுதிகளில் இருந்து மணல் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் பொருட்டு அனைத்து குவாரிகளும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்ற பிறகே இயங்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்டத்தில் இயங்கி வந்த 27 குவாரிகளும் அதிரடியாக கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மூடப்பட்டது. குவாரிகள் மூடப்பட்டதால் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே மணலை இருப்பு வைத்திருந்தவர்கள் மட்டும் பணியைத் தொடர்ந்தனர்.
மணல் தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்ட ஆற்றங்கரையோரங்களில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களில் சிலர் இரவு நேரங்களில் மணலை ஏற்றி வந்து தங்கள் வீட்டின் அருகே கொட்டி இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.குவாரிகள் செயல்பட்டபோது ரூ.700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டயர் வண்டி மணல், தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமானப் பணிக்கு மூலப் பொருட்களான சிமென்ட், ஜல்லிகளை விட மணல் பல மடங்கு தேவையுள்ளது.நான்கு மூட்டை சிமென்ட்டிற்கு ஒரு டயர் வண்டி மணல் தேவையுள்ளது. ஆனால், மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பலர் கட்டுமானப் பணியைப் பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால், மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக சரிவர வேலை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆற்றங்கரையோர கிராமங்களில் மணல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், மாவட்டத்தில் மணல் குவாரியை மீண்டும் துவக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, கட்டுமானத் தொழிலையும், கட்டுமான தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும் என கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

