கியூ பிரிவு போலீஸாரிடம் தகவல்களை தெரிவிக்க மறுக்கும் அமெரிக்க கப்பல் வீரர்கள்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதக் கப்பலில் கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை தங்களது


தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதக் கப்பலில் கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை தங்களது விசாரணையை தொடங்கினர். இருப்பினும், கப்பலில் உள்ளவர்கள் எந்தவித முறையான தகவல்களையும் தெரிவிக்க மறுத்து வருவதாகவேக் கூறப்படுகிறது.
இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியில்லாமல் நுழைந்த அமெரிக்க நாட்டு தனியார் நிறுவன கப்பலை கடந்த 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். சோமாலிய கடல்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அந்தக் கப்பலில் 35 அதிநவீன துப்பாக்கிகள், 5765 தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பாதுகாப்பு வீரர்களும், 10 மாலுமிகளும் கப்பலிóல் உள்ளனர். அனுமதியில்லாமல் இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. மீனவர்களிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியது என்ற பிரிவின் கீழ் கடலோர பாதுகாப்பு குழும (மரைன்) போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கப்பல் கேப்டன் உள்ளிட்ட 35 பேரிடமும் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திடீரென செவ்வாய்க்கிழமை இரவு கியூ பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதையெடுத்து, விசாரணை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி விமானம் மூலம் புதன்கிழமை தூத்துக்குடி வந்தார். பினனர், கியூ பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சுகந்த பகவதி மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதக் கப்பலுக்குச் சென்று அங்குள்ளவர்களிம் பவானீஸ்வரி தலைமையிலான கியூ பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
விசாரணையின்போது, மன்னார் வளைகுடா பகுதிக்குள் வந்ததற்கான காரணம் குறித்தும், மீனவர்கள் சிலரிடம் திருட்டுத்தனமாக டீசல் வாங்கியது குறித்தும் கேள்விகளை எழுப்பியபோதிலும் கப்பலில் இருந்தவர்கள் முறையான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லையாம்.
மேலும், எந்தப் பகுதிகளுக்கெல்லாம் என்றது என்ற விவரம் அடங்கிய குறிப்பேட்டையும் கப்பலில் உள்ளவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால், முதல்நாள் விசாரணையில் எந்தவித தகவலையும் கியூ பிரிவு போலீஸாரால் அமெரிக்க கப்பலில் உள்ளவர்களிடம் இருந்து பெற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
இதுதவரை, தெரிவித்த தகவல்களையே மறுபடியும் கப்பலில் உள்ளவர்கள் கூறி வருவதால் அடுத்தக்கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வது என கியூ பிரிவு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, மத்திய அரசின் உளவுப் பிரிவான ரா அமைப்பு அதிகாரிகளும், கப்பல் துறை அதிகாரிகளும் கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டாத நிலையில் இருப்பதால் அமெரிக்க ஆயுதக் கப்பல் புறப்பட்டுச் செல்ல மேலும் சில நாள்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...