திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வேன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கவிழந்ததில் அதில் பயணம் செய்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சுரண்டை, சிவகுருநாதபுரம், பாறையடி தெருவைச் சேர்ந்த சேர்மராஜ் மனைவி பத்மா (28) என்பவர், அங்குள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்யும் சிலர் திங்கள்கிழமை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். வேனை தென்காசி, கடையால் உருட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்த அ.சிவன்ராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வேன் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மடவார்வளாகம் கோட்டை கருப்பசாமி கோயில் அருகே நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மண் ரோட்டில் இறங்கி கவிழ்ந்துள்ளது.
இதில் வேனில் பயணம் செய்த பத்மா, ராமலட்சுமி (20), ஹரினாதேவி (22), ஜெயந்தி (20), அனிதா (21), ஸ்ரீமன் (7) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பத்மா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் சிவன்ராஜைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









