திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த கைதிகள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற வாசலில் அமர்ந்து திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் நீடித்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ராஜவல்லிபுரம், சத்திரம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் அருண் (27), கணேசன் மகன் தங்கம் (25), பால்பெருமாள் மகன் சுபாஷ் (21), சுப்பிரமணியன் மகன் வெள்ளபாண்டி (22), மாரியப்பன் மகன் ராஜேந்திரன், அர்ஜூன் மகன் சுரேஷ், முருகன் என்ற வண்டு முருகன், பால்ராஜ் மகன் அருண்குமார்,
செல்லப்பா மகன் ராஜ்குமார், தச்சநல்லூர் அருகேயுள்ள மேலக்கரையை சேர்ந்த ராஜ்குமார் என்ற குமுளிராஜ்குமார் (31) உள்ளிட்ட 10 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக மத்திய சிறையில் இருந்து திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
இதில் சுபாஷ், வெள்ளபாண்டி ஆகியோர் தொழிற்கல்வி பயின்று வரும் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்களில் 9 பேர் நீதிமன்ற வாசல் முன்பு அமர்ந்து திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். தங்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும், தொடர்பில்லாத மேலப்பாட்டம் கொலை மற்றும் சில வழக்குகளில் தங்களையும் சேர்த்துள்ளதாக புகார் தெரிவித்து தர்னாவில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தினால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸார் அழைத்து சென்று 3 ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நீதிபதி சி. செந்தில்குமார் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.