/

பழனி அருகே அனுமதியின்றி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள், எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல்

பழனி அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்தவர்களிடம் இருந்து எலெக்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின்குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2014, 12:45 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்தவர்களிடம் இருந்து எலெக்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின்குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து காளிபட்டி செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமாக இருவர் மோட்டார்சைக்கிளில் கருப்பு சாக்குப்பையை கொண்டு சென்றுள்ளனர். 

இதைத் தொடர்ந்து அவர்களை விரட்டிப் பிடித்த க்யூ பிரிவு போலீஸார் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் அரசு அனுமதியில்லாத 82 ஜெலட்டின் குச்சிகள், 42 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தது தெரியவந்தது.  விசாரணையில் அவர்கள் இருவரும் பழனி அருகே சிந்தலவாடம்பட்டியை சேர்ந்த மக்குச்சாமி மகன் வெங்கடாசலம்(29), மணி மகன் துரையன்(27) என்று தெரியவந்தது.  விவசாயிகளான இருவரும் கிணற்று வேலைக்காக இவற்றை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் இருவரையும் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்து ஒப்படைத்தனர்.  வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து ஜெலட்டின் குச்சிகள், எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.  இவற்றை அவர்கள் யாரிடம் வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  கைப்பற்றப்பட்ட இரு வெடி பொருட்களுமே தனித்தனியாக வைக்கப்பட வேண்டியவை. 

ஆனால் இவற்றை வாங்கி வந்த இருவருக்குமே அதன் விபரீதம் தெரியாமல் ஒரே சாக்கில் கட்டி எடுத்து வந்துள்ளனர்.  இவை இரண்டுமே எதிர்பாரவிதமாக உரசினால் வெடிக்கும் தன்மை உடையவை.  நல்லவேளையாக இரண்டுமே உராயாமல் இருந்து பெரிய விபத்தை ஏற்படுத்தாமல் இருந்தது அதிசயமே என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.