டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நவஜீவன் எக்ஸ்பிரசில் மர்மப் பெட்டி: கும்மிடிப்பூண்டியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததால் பரபரப்பு

கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் மார்க்கமாக குஜராஜ் மாநிலம் அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாழக்கிழமை மர்ம பெட்டி கேட்பாரற்று கிடந்ததை ஒட்டி அந்தப் பெட்டி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டது. அதனை வெடிகுண்டு நிபுணர்கள்

News image
Updated On :8 மே 2014, 1:29 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் மார்க்கமாக குஜராஜ் மாநிலம் அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாழக்கிழமை மர்ம பெட்டி கேட்பாரற்று கிடந்ததை ஒட்டி அந்தப் பெட்டி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டது. அதனை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.

மர்மப் பெட்டி கிடந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ்- கோவையில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் விரைவு மின் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு கிளம்பியது. அப்போது எஸ்-1 ரயில் பெட்டியில் இருக்கை எண் 63-64ற்கு இடையே கீழே மர்ம பெட்டி ஒன்று இருந்தது.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் வெடி குண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகள் பீதியுடனே ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில் அந்த மர்ம பெட்டி யாருடையது என்று பயணிகள் விசாரித்த நிலையில் அந்த பெட்டிக்கு யாரும் உரிமை கோராததால் பயணிகள் அந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ என்று பயந்து உடனே ரயில்வே கண்காணிப்பு அறைக்கு தகவல் அனுப்புனர். மேலும் அந்த ரயில் பா.ஜ.க கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்திற்கு செல்ல இருந்ததால் போலீஸார் மத்தியிலும் அந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பதட்டம் இருந்தது.

தொடர்ந்து அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அருகேயுள்ள பெட்டிக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட நிலையில் ரயில்வே டி.எஸ்.பி காந்தி இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸாருக்கும், ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளித்ததன் பேரில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கடந்த மே-1ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் முனிவேல், தலைமை காவலர் பற்குணம் மற்றும் ரயில்வே போலீஸார் சண்முகம், கருப்புசாமி, பினாய் ஜோசப் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 3வது ரயில் பாதையில் 10.40 மணிக்கு வந்த நவஜீவன் எக்ஸ்பிரஸில் இருந்து அந்த மர்ம ரயில் பெட்டியை பெற்றுக் கொண்டு அதை பாதுகாப்பாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நடை மேடை 1ல் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்தனர். அதனை தொடர்ந்து இரு நிமிடத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் பரபரப்பான 2 மணி நேரம்:- கும்மிடிப்பூண்டியில் அந்த 15 கிலோ எடையுள்ள மர்ம பெட்டி வைக்கப்பட்டதும் நான்கு புறமும் அந்த பெட்டியின் அருகில் யாரும் வராமல் இருக்க சப் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், அலமேலு, ரவி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதனால் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு கூடிய நிலையில் அந்த பெட்டியை காண பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு கூடினர்.

ஒன்றரை மணி நேரம் கழித்து விரைந்த ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்:- காலை 10.40 மணி அளவில் அந்த மர்ம பெட்டி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் பகல் 12 மணி அளவில் தான் ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த தலைமை காவலர் முகமது சாலிகு, காவலர் ஆனந்தன், சேதுமாதவன், கேரளா மாநிலம் பாலகாடு மண்டலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மோப்ப நாய் ஜூலி மற்றும் பயிற்சியாளர் ரஸ்ஸல் சம்பவ இடம் வந்தனர்.

தொடர்ந்து வெடிகுண்டுகளை கண்டறிவதில் திறன் படைத்த ஐந்தரை வயதான மோப்ப நாய் ஜூலியை வைத்து அந்த பெட்டியை அதிகாரிகள் சோதித்தனர். தொடர்ந்து ஈ.வி.டி என்ற இயந்திரத்தின் மூலம் சோதித்ததில் அதில் டைம் பாம் இல்லை என்று உறுதி செய்ய அதிகாரிகள், பின்னர் அந்த பெட்டியை கயிறு கொண்டு கட்டி அனைவரையும் அப்புறப்படுத்தி அந்த கயிறை வேகமாக இழுத்த போது அந்த பெட்டியில் எவ்விதமாக வெடிகுண்டும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அந்த பெட்டி திறக்கப்பட்டது.

5500 ரூபாயுடன் முடிந்த வெடிகுண்டு பீதி:- அந்த பெட்டி திறக்கப்பட்டதும் அதில் ஆண்களுக்கான ஆடைகள், சோப்பு, பவுடர் உள்ளிட்ட பொருட்களும், ஒரு புது புடவையும் இருந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்த பர்ஸில் சோதித்த போது அதில் 5500 ரூபாய் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவை இருந்தது. அதன் மூலம் அந்த பெட்டியின் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம் பீமார் மாவட்டம் மார்வா அடுத்த சீசவா பகுதியை சேர்ந்த மோடாராம் மகன் புர்காராம்(20) என்பது தெரியவந்தது.

மேற்கண்ட நபரிடம் இருந்து மர்ம நபர்கள் அந்த பெட்டியை திருடி இருக்கலாம், அல்லது புர்காராம் வேறு பெட்டியில் ஏறி இருக்கலாம் என்பதால் மர்ம பெட்டியை கண்டதும் பயணிகள் வெடிகுண்டு பீதியால் அந்த பெட்டி குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக இரண்டு மணி நேரம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.