மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் கடனாநதி, ராமநதி அணைகள் 2 ஆவது முறையாக சனிக்கிழமை நிரம்பியதை அடுத்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் 2 தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் கடனாநதி, ராமநதி அணைகள் 2 ஆவது முறையாக சனிக்கிழமை நிரம்பியது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணைக்கு விநாடிக்கு 550 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 83.75 அடியாக உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டியதும் அணையில் இருந்து உபரி நீர் 100 கனஅடி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதேபோல் கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.00 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரி நீர் கருணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இவ்விரு அணைகளிலும் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டதாலும், நீர்பிடிப்பு பகுதியில் ஆற்றின் கரையோர நகரங்களில் பலத்த மழை பெய்ததாலும் தாமிரவருணி ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.