மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை இரவு 100 அடியை எட்டியது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 139 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.69 அடியாகவும் இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. பிரதான அணைகளில் ஒன்றான சேர்வலாறு அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 600 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.20 அடி உயர்ந்து 139 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 1,222.43 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் 1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 1.4 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 1.2 மி.மீ மழையும், நான்குனேரியில் 1 மி.மீ மழையும், ஓட்டப்பிடாரத்தில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 99.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 662 கனஅடி நீர்வரத்து இருந்தது. இரவு 7 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர்வரத்து இருந்து இதையடுத்து அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 59 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 110 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 82.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 64.96 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 95.75 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 37 அடியாவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது.