தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நிலத்தகராறில் முன்னாள் கவுன்சிலர் கடத்தல்: 9 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் இரு தரப்பினரிடையே இருந்து வந்த நிலத்தகராறை தொடர்ந்து மேற்பார்வை பணியில் இருந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி நாராயணன்(45)

Updated On :1 அக்டோபர் 2014, 10:17 am

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் இரு தரப்பினரிடையே இருந்து வந்த நிலத்தகராறை தொடர்ந்து மேற்பார்வை பணியில் இருந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி நாராயணன்(45) என்பவரை சென்னையை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி அடித்த சம்பவத்தை தொடர்ந்து 9 பேர் பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈகுவார்பாளையம் பகுதியில் சென்னையை சேர்ந்த தொழிலதிபரான வினோத் பாட்லா(60) என்பவருக்கு சொந்தமாக 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் குறிப்பிட்ட 50 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது என சென்னையை சேர்ந்த ரவி என்பவர் கூறி வரும் வேளையில் இருதரப்பினரிடையே இந்த நிலம் தொடர்பாக மோதல் இருந்து வந்தது. வினோத் பாட்லாவிடம் மேற்பார்வையாளராக இருப்பவர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் லட்சுமி நாராயணன். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மேற்கண்ட பகுதியில் வேலையாட்கள் தங்குவதற்கு அறை கட்டுமானப் பணியை லட்சுமி நாராயணன் மேற்பார்வை செய்து வந்தார்.அப்போது காரில் அங்கு 9 பேர் கொண்ட கும்பலுடன் வந்த ரவி அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்து லட்சுமி நாராயணனை காரில் தூக்கி போட்டுக் கொண்டு அங்கிருந்து காரில் சென்றனர். சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில் காரில் மேற்கண்ட 9 பேரும் லட்சுமி நாராயணனை அடித்து துன்புறுத்தி 20 கி.மீ தொலைவில் உள்ள எளாவூர் பகுதியில் அவரை இறக்கி விட்டுள்ளனர். அதே சமயம் லட்சுமி நாராயணன் காரில் கடத்தப்பட்டது குறித்து தகவலின் அடிப்படையில் ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லட்சுமி நாராயணனை கடத்திய காரை கவரப்பேட்டையில் போலீஸார் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து இது குறித்து புகாரின் அடிப்படையில் போலீஸôர் சென்னை சேத்துபட்டை சேர்ந்த வினோத்குமார்(29), எழும்பூரை சேர்ந்த இந்திரிஷ்(34), சங்கர்(28) ஷெனாய் நகரை சேர்ந்த வேலு(43), நாகராஜ்(38), சுதாகர்(38), பழனி(40), புதுப்பேட்டையை சேர்ந்த சையத்(38), கீழ்பாக்கத்தை சேர்ந்த ஜோதி(26) ஆகிய 9 பேரை பாதிரிவேடு போலீஸôர் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

இந்த கடத்தல் சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தல் நபர்களை 2 மணி நேரத்திலேயே பிடித்த பாதிரிவேடு போலீஸாரை டி.எஸ்.பி சிவலிங்கம் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.