ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் அழகான கோயிலில் ஸ்ரீநிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை மக்கள் தென்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.திருவேங்கடமுடையானைப் போலவே, இத்திருவண்ணாமலையிலும் ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கைககளை திருவடியைக் காட்டியவாறு உள்ளார். அவ்வாறே அவரின் திருவடியை சரணடைந்த பக்தர்கள் தங்கள் துன்பத்தை முழங்கால் அளவு வெள்ளத்தைக் கடப்பது போல எளிதாக கடந்து விடுவார்கள் என்பதை உணர்த்த மற்றொரு கரத்தை திருத்தொடையில் பொருத்தியும், இரு கரங்களிலும் சக்கரமும், சங்கும் ஏந்தியும், திருமார்பில் மகாலெட்சுமியுடனும், உயர்ந்த கிரீடம் தரித்து, கருணை பொங்கும் கண்களுடனும், அழகிய புன்முறுவலுடனும், இடையில் வாளுடன் எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் காட்சி பக்தர்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.