ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா உலக பிரசித்தி பெற்றது. இவ்விழாவிற்கு கடந்த 14 ஆண்டுகளாக பழனி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15ம் ஆண்டாக மலர்கள் அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை துவங்கியது. நிகழ்ச்சிக்கு சபா தலைவர் ஹோட்டல் கண்பத் இயக்குனர் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார். கவுரவ தலைவர் எஸ்ஆர்கே சின்னச்சாமி, ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்நாளன்று சம்பங்கி, தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு கிலோ அனுப்பப்பட்டது. இதுகுறித்து சபா செயலர் மருதசாமி கூறும்போது, திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது பல்வேறு சுவாமி புறப்பாடுகளின் போது சுவாமியை அலங்காரம் செய்யவும், மலர் தோரணங்கள் அமைக்கவும் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பல ஆயிரம் எடையிலான வண்ண மலர்கள் தேவைப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளே மலர்கள் அனுப்பப்படும். இதற்கு திருமலை திருப்பதி பேருந்தில் மலர்கள் இலவசமாக கொண்டு செல்லப்படும். தற்போது பழனியில் இருந்து திருமலை செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்காக சுமார் 12 ஆயிரம் ரூபாய் செலவில் வாடகை வாகனம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வாகனத்தில் பிரம்மோற்சவத்துக்கான மலர்கள் என்ற விபரங்கள் பெரிய பதாகைகள் மூலம் எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார். வரும் வரும் அக்.3ம் தேதி வரை வரையில் மலர்கள் அனுப்பப்படுகிறது.