பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாபநாசம் மலையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய மர்ம நபர்கள் வியாழக்கிழமை வனத்துறையினர் கண்டதும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து 100

News image
Updated On :23 ஏப்ரல் 2015, 1:27 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய மர்ம நபர்கள் வியாழக்கிழமை வனத்துறையினர் கண்டதும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து 100 கிலோ எடையுள்ள சந்தன மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியாவின் 17 ஆவது புலிகள் சரணாலயமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் கடையத்திலிருந்து திருக்குறுங்குடி வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறு எங்கும் இல்லாத அரிய தாவர வகைகளும் உள்ளன.பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. புலிகள் காப்பகத்தில் பாபநாசம் அணைக்கு மேல் வனப்பகுதியில் தனியாருக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.

இதனிடையே சில தினங்களுக்கு முன் சேர்வலாறு அருகே வனப்பகுதியில் பாதர் பீட் என்ற இடத்தில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதற்கான தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.வியாழக்கிழமை சேர்வலாறு வனப்பகுதியில் முண்டன்துறை வனச்சரகர் ஆர். வெள்ளத்துரை தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து சேர்வலாறு மலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சிறப்புபடை கண்காணிப்பு:

சந்தன மரங்களை வெட்டியது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் பாபநாசம், சேர்வலாறில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். புலிகள் காப்பகத்தில் பாபநாசம், கடையம், மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் பல இடங்களில் சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சிறப்புபடையினர் அமைக்கப்பட்டு புலிகள் காப்பகத்தில் மரங்கள் எதுவும் வெட்டப்பட்டனவா என்பதை கண்டறிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.