6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டையில் குடியிருப்புக்குள் புகுந்த ஆண் சிறுத்தை!: நான்கரை மணி நேரம் போராடி பிடித்தனர்

பாளையங்கோட்டையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் நான்கரை மணி நேரம் போராடி பிடித்தனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள

News image
Updated On :18 ஜனவரி 2015, 12:10 pm

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் நான்கரை மணி நேரம் போராடி பிடித்தனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியில் வனவிலங்கு புகுந்ததால் நகரம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முத்தூர் மலையடிவாரப்பகுதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது திருமால்நகர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவரது வீட்டின் மாட்டுத்தொழுவத்தில் இருந்து சிறுத்தை வெளியேறியதைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த சிறுத்தை, திருமால்நகர் 1 ஆவது, 2 ஆவது தெருக்களின் மாடிகளில் வலம் வரத் தொடங்கியது.

மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ் உத்தரவின்பேரில் 25-க்கும் மேற்பட்ட வனஊழியர்கள், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரெட்டியார்பட்டி, திருமால்நகர், என்.ஜி.ஓ. ஏ மற்றும் பி காலனி, பெருமாள்புரம், ஜெபாகார்டன், ஆவின் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் அனைவரும் வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

தகலறிந்ததும் திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மயக்கமருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்தனர். அதற்கு முயற்சி மேற்கொண்டபோது திருமால்நகர் மயன்நகர் பகுதியைச் சேர்ந்தவரும், காடுவெட்டி ஊராட்சித் தலைவருமான ஆறுமுகம் (44), பெருமாள்புரம் என்.எச்.நகர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுரேஷ்குமார் (44) ஆகியோரை சிறுத்தைத் தாக்கியது. மேலும், பத்திரிகையாளர் மீரான்கனியும் சிறுத்தைத் தாக்கி லேசான காயமடைந்தார். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருமால்நகர் செண்பக வனத் தெரு பகுதிக்கு சிறுத்தை வந்தபோது கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன், ஊதுகுழல் ஊசி மூலம் மயக்கமருந்தைச் செலுத்தினார். இதில் மயக்கமடைந்த சிறுத்தை அந்தத் தெருவில் 163 ஆவது குடியிருப்பில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த கழிப்பறைக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த ஜன்னல் வழியாக மேலும் ஒரு மயக்க ஊசி சிறுத்தையின் மீது செலுத்தப்பட்டது. கழிப்பறைக்குள் மயக்க நிலையில் சிறுத்தைக் கிடப்பதாக பரவிய தகவலால் பெண்கள், குழந்தைகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருமால்நகர் பகுதியில் திரண்டனர். அதன்பின்பு வனத்துறை சார்பில் கொண்டுவரப்பட்ட கூண்டுக்குள் அடைத்து சிறுத்தையை பிடித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய பரபரப்பு காலை 10.30 மணிக்கு சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியதும்தான் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் அ.வெங்கடேஷ் கூறியதாவது:

பாளையங்கோட்டை திருமால்நகர் பகுதியில் சிறுத்தை புகுந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று மயக்கமருந்து மற்றும் கூண்டு மூலம் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாமல் சிறுத்தையை உயிருடன் பிடித்துள்ளனர். அது மூன்றரை வயதான ஆண்புலி என்பது தெரியவந்துள்ளது. இதற்காக களக்காடு, அம்பாசமுத்திரம், திருநெல்வேலியில் இருந்து 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்துதான் இந்தப் புலி வந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். திருநெல்வேலியில் பிடிபட்டுள்ள சிறுத்தையை, முன்டன்துறையில் உள்ள கௌதலையாறு என்னும் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

பேட்டியின்போது திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இ.புவனேஸ்வரி உடனிருந்தார்.இதுகுறித்து திருமால்நகர் பொதுமக்கள் கூறியதாவது:திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிக்குள் வனவிலங்கான சிறுத்தை வந்தது இதுவே முதல்முறை. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு இதுபோன்ற விலங்குகள் எளிதில் வர வாய்ப்பில்லை. இருப்பினும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்ட பின்பு அந்த சிறுத்தை எந்த வழியாக வந்தது என்பதை வனத்துறையினர் விசாரித்து கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.