இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ், புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பால் பொதுமக்கள் பெருமளவு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகமும், அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடிக்கிவிட்டு தற்போது நிலமையை கட்டுக்குள் வைத்துள்ளது. நோய்தடுப்பு நடவடிக்கைகளில் அரசுப் பணியாளர்கள் முழுவீச்சில் பங்கேற்றுள்ள இந்த நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நோய் தடுப்புப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கும் வசதியாக 22-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் போராட்டத்தில் இரு சங்கங்களும் கலந்து கொள்ளாது என காமராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.