ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி ஆகிய மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.டெக். படிப்பதற்கு இந்தியா அளவில் நடைபெற்ற கேட் நுழைவுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் கேட் நுழைவுத் தேர்வினை இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த தேர்வுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.டெக். மாணவர்களுக்கு தினமும் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி துறை வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதிப்பெண்கள் பெற்றால் அவர்களுக்கு கிரிடிட் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கேட் நுழைவுத் தேர்வில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்கள் 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர். எஸ்.லுலிதா காவியா 96.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் பயோ டெக்னாலஜி துறையில் 417-வது இடம் பெற்றுள்ளார்.
டி.எம்.ஹரீஸ்குமார் 81.6 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று 1092-வது இடம் பெற்றுள்ளார். வி.விஜய் ஆகாஸ்வர்மா 72.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று 2016-வது இடம் பெற்றுள்ளார். இவர்கள் ஐஐடி கவுகாத்தி மற்றும் மத்திய நிறுவனங்களில் எம்.டெக் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளித்த கேட் நுழைவுத் தேர்வு பயோ டெக்னாலஜி துறை பயிற்சியாளர் கதிரேசன், மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன், துறைத் தலைவர் பழனிச்செல்வம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.