விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் காலவதியான பூச்சி கொல்லி மருந்துகளை விநியோகம் செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் வே.ராஜாராமன் எச்சரிக்கை செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) செண்பகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அம்மையப்பன் என்பவர் உரம் மற்றும் விதைக் கடைகளில் கலாவதியான பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி மருந்து குப்பிகளை மாலையாக அணிந்து வந்து கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்): தற்போது, 15 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில் கோடைமழை அவ்வப்போது பெய்ததை தொடர்ந்து நன்றாக உள்ளது. கடந்த ஆண்டு குவின்டால் ரூ.6 ஆயிரம் வரையில் கிடைத்த நிலையில், இப்போது குறைந்த விலையாக ஒரு கிலோவிற்கு ரூ.32க்கு வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியில்லாத நிலையிருக்கிறது. அதனால் பருத்திக் கழகம் மூலம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்க தலைவர்): ஒவ்வொரு பருவ காலத்திலும் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு வங்கிகளில் விவசாயிகள் காப்பீடு செய்கின்றனர். நஷ்டமடைந்தால் அதற்கான தொகை கிடைக்காத நிலையே இருக்கிறது. அதனால் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன பயிருக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு எத்தனை நாள்களுக்குள் விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இதை முறையாக உலர்த்துவதன் மூலம் தரமான வத்தல் தயார் செய்ய முடியும். அதற்கு விவசாயிகளுக்கு சூரிய மின்சார உலர்த்திகள் வழங்க வேண்டும் என்றார்.
அம்மையப்பன்(விவசாயிகள் சங்க வட்டார செயலாளர்): ராஜபாளையம், சேத்தூர் வட்டார பகுதியில் உள்ள உரம் விதை விற்பனைக் கடைகளில் தோட்டக் கலை பயிரான கத்தரி, தக்காளி, வீரிய ஒட்டு ரகம் விதைகளை விற்பனை செய்கின்றனர். அதை வாங்கி பயிரிட்டால் செடி வளர்ந்த நிலையில் வாடி விடுவதோடு, காயும் சிறிய அளவிலேயே காய்க்கிறது. இக்கடைகளில் பயிர்களுக்கு தெளிப்பதற்கு விற்பனை செய்யப்படும் பூச்சி கொல்லி மருந்துகளும் கலாவதியான, தடைசெய்யப்பட்டவைகளை விற்கின்றனர். இதை வாங்கி தெளிப்பதன் மூலம் காய்களும் விஷத்தன்மையாக மாறிவிடும் சூழ்நிலையிருக்கிறது. அதை விதை மற்றும் உர ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
சேது செல்லச்சாமி(விவசாயி): வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயம் செய்வதற்கு முன்பு உழவு செய்யும் நிலை, பருவத்தில் விதைத்தல், நிலத்தை பண்படுத்துதல் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். தற்போது, கடந்த ஓராண்டாக பயிற்சி அளிக்கப்படாமலே இருக்கிறது என்றார்.
முருகன்(விவசாயி): வத்திராயிருப்பு, கூமாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், தாணிப்பாறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதியில் பசுமையாகவும், நெல் அதிகமாகவும் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதியில் கண்மாய்களுக்கான வரத்துக் கால்வாய்கள் உள்ளன. மொத்தம் 957 கண்மாய்களில் 367 கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இதில், கிழக்கு பகுதியில் உள்ள சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் வரத்துக் கால்வாய்கள் இல்லாத நிலையிருக்கிறது. அதை தூர்வாருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு ஆட்சியர் பதில் அளித்து பேசுகையில், பருத்திக்கு உரிய விலை கிடைப்பதற்கு பருத்திக் கழக அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும். எந்தெந்த பயிருக்கு காப்பீடு வழங்கப்படுகிற விவரம் குறித்து கூட்டம் நடத்தி எடுத்துரைக்கப்படும். மிளகாய் உலர்த்துவதற்கு சூரிய மின் உலர்த்திகள் தேவைப்படுவோர் வேளாண்மை பொறியியல் துறையிடம் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.4 லட்சத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
காலவதியான பூச்சிக் கொல்லி மற்றும் தரம் குறைந்த விதைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விதை ஆய்வாளர் மற்றும் உரம் தரக்கட்டுபாடு அலுவலர் ஆகியோர் ஒவ்வொரு கடைகளிலும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வேளாண்மை பொறியியல் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் விவசாயிகளுக்கான தொழில் நுட்ப பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். கண்மாய்களில் மரமாத்து பணிகள் மேற்கொண்டு, வரத்துக் கால்வாய்களை சீரமைப்பதற்கு நீர்வள நிலவளத்திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண்மை துறை துணை இயக்குநர் பூவலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.