

அருப்புக்கோட்டை வட்டார செங்கோட்டையாறு துணை வடிநில பகுதியில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
இம்மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே செங்கோட்டையாறு துணை வடிநிலப்பகுதியில் நீர்வள நிலவள திட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி்யின் குழுவினர் டோனி தலைமையில், வேளாண் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) செண்பகமூர்த்தி, கூடுதல் வேளாண்மை இயக்குநர் குணசேகரன், வேளாண் வணிக துணை இயக்குநர் முத்துமுனியாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் பயனடையும் வகையில் சாகுபடி செய்த தானியங்களை சேமித்து வைக்கும் வகையில் ரூ.7.15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிட்டங்கி மற்றும் உலர்களம் விளைபொருள் ஆர்வர் குழுக்களின் செயல்பாடு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அங்கு தானிய மூட்டைகளை சேமித்து அடுக்கி வைக்க இரும்பிலான கட்டை, மிகச் சரியாக எடைபோடும் மின்னணு மேடை தராசு, ஈரப்பதத்தை கண்டறிய ஈரப்பதமானி மற்றும் தானியங்களை பாதுகாக்க தார்பாய் போன்ற உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கிட்டங்கி மூலம் இப்பகுதியில் உள்ள 103 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இக்கிடங்கு விவசாய ஆர்வலர் குழு ஆலோசனை குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு 94 டன் தானிய மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச வாடகையாக ரூ.2 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
இங்கு குறைந்தது 6 மாதம் வரை தானியங்களை சேமிக்க வைக்க முடியும். சேமித்து வைத்துள்ள தானியங்களுக்கு அருகில் உள்ள வாழ்வாங்கி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் பொருளீட்டுக் கடனும் பெற்றுத் தரப்படுகிறது. இதனால், அறுவடை செய்த தானியங்களை களத்து மேட்டில் விற்பனை செய்யாமல், இருப்பு வைத்து விற்பதால் தரகு, எடைக்கமிஷன் இல்லாமல் 10 முதல் 12 சதவீதம் கூடுதலாக லாபம் பெறுவதாக உலக வங்கி குழுவினரிடம் விவசாயிகள் தெரிவி்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் வணிக அலுவலர்களான காய்த்ரிதேவி, சந்திரசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ்பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.