அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன்

வருகிற மார்ச் 21 ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்
அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன்
Updated on
2 min read

வருகிற மார்ச் 21  ஆம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கட்சி சார்பில் மூத்ததலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பங்கேற்பார் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நீலகிரி மாவட்டம் ஊடலூர் அருகே புலி, யானை தாக்கி 3 பேர் இறந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து குடிபெயர்ந்து செல்லும் நிலை உள்ளது. வனஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தில் பாஜக அரசு விவசாயிகள் விரோத போக்கை கடைபிடித்துளளது. நில உடைமையாளர்களிடன் ஆலோசனை கேட்க வேண்டும்.

விவசாயிகள் உரிமை மற்ற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக கூட்டணி கட்சிகளே நாடாளுமன்றத்தில் எதிர்த்து உள்ளது. தமிழகத்தில் ஆளும் அதிமுக இதை ஆதரித்துள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. எனவே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு சமூகவிரோதிகளை ஒடுக்கி மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தமாகா கட்சி தொடங்கிய பிறகு தமிழகத்தில் 95 சதவீத மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். அதில் மத்திய, மாநில அரசு குறைபாடுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். எங்களை பொறுத்தவரை தற்போது இயக்கத்தை பலப்படுத்தவும், வளர்ச்சியடையும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி பற்றி சிந்திக்க நேரம் இல்லை.

ஜூனுக்கு பிறகு முழுவீச்சில் கட்சி பணி: மார்ச் 20-ம் தேதி சென்னையில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்த முழுவிபரம் தெரியவரும். உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்தவுடன் ஜூன் மாதத்திற்கு பிறகு நூறு சதவீத கட்சி பணி தொடங்கப்படும். முதல் பணியாக மாவட்ட, வட்டார, கிராம ரீதியாக உள்ள பிரச்சனைகளுக்கு போக்குவதற்காக கட்சி போராடும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படுவோம்.இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணத்திற்கு பிறகும் இலங்கை அதிபர் ரணில்விக்கிரமசிங்கவின் பேசிய பேச்சு, மோசமான, பொறுப்பற்ற பேச்சாக உள்ளது. மத்திய அரசு இதற்குஎந்த அளவு கண்டித்துள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.

சிதம்பரத்தை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வேண்டும்: சிதம்பரம் நகரை மற்றும் சுற்றுப்பகுதிகளை மத்திய, மாநில அரசுகள் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா ஸ்தலமாக அறிவித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 1962-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் அப்போதைய மக்கள்தொகையை கணக்கில் கொண்டு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பழுதடைந்து புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் அறிவிப்பு செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளதால் நகர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே விரைவில் புதிய திட்டத்திற்கு டென்டர் விட்டு பணியை தொடங்க வேண்டும். சிதம்பரம் பகுதியில் 4500 பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். நகரில் நவீன மின்மயாணம் அமைக்க வேண்டும். நகரின் மேற்பகுதியில் குப்பை மேடுகளினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகள் மூலம் அதனை எரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க  வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலையில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2009-ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். எனவே அவர்களுக்கு பட்டய சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசாணைப்படி வழங்க வேண்டிய சரண்டர், போனஸ், பதவிஉயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை தொகுப்பூதிய பணியாற்றுபவர்களுக்கு பணி நிரந்திரம் செய்யப்படவில்லை. 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com