மருந்துகளை ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து வரும் அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மருந்து வணிகர்கள் சங்கத் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம். ராஜ்குமார், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஏ.டி. குமார், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜான்பிரிட்டோ ஆகியோர் புதன்கிழமை திருநெல்வேலியில் அளித்தப் பேட்டி: இந்திய அளவில் 8 லட்சம் மருந்து வணிகர்கள் உள்ளனர். மருந்துகளை மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதால் நுகர்வோருக்கு பயன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் போலி மருத்துவ சீட்டு மூலம் மருந்துகள் வாங்கலாம். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.
போதை ஊசி உள்ளிட்ட போதை மருந்துகள் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. தவறான மருந்துகள் சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. பன்றி காய்ச்சல் போன்ற கொடி நோய்களுக்கான மருந்துகளின் தன்மை குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர் விளைவுகளை ஏற்படும்.
எனவே மருந்துகளை ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே மருந்து வணிகர்களின் வாழ்வாதாரம் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கூடாது என வலியுறுத்தி அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1000 மருந்து வணிகர்களும், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 400 மருந்து வணிகர்களும் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் 24 மணி நேரம் மருந்துக் கடைகள் இயங்காது என்றனர் அவர்கள்.
பேட்டியின்போது, திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஸ்டீபன், குமரி மாவட்டச் செயலர் ஏ. டேவிட்ரவி, மொத்த மருந்து விற்பனை பிரிவின் மாவட்டத் தலைவர் எஸ். சங்கரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.