ஆனால், இவற்றில் நெல்சன் மாணிக்கம் சாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் மூன்றாவது பிரிவு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதை மட்டும் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட தனிப் பாலமாக காட்டி திறப்பு விழா நடத்துகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த பாலத்திற்கான பணிகளை 2011 ஆம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியிருந்தால் 2013 ஆம் ஆண்டில் பாலத்தை திறந்திருக்கலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காத அரசு, இப்போது அவசர, அவசரமாக பாலத்தை திறந்து மக்களை ஏமாற்ற முயல்கிறது. அதேபோல், திருச்சி பொன்நகர் தொடர்வண்டி மேம்பாலமும் அரைகுறையாகக் கூட கட்டி முடிக்கப்படாத நிலையில் தான் இன்று திறக்கப்படுகிறது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பு ரூ.86 கோடி ஆகும். பொன்நகரில் தொடங்கி 3 பிரிவுகளாக பிரிந்து மத்திய பேரூந்து நிலையம், மன்னார்புரம், தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொன்நகர் - தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றை இணைக்கும் பிரிவின் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதை ரூ.34.24 கோடியில் கட்டப்பட்ட தனிப்பாலமாக காட்டி இன்று திறப்பு விழா நடக்கிறது. அதேபோல், காட்டுப்பரமக்குடி தொடர்வண்டி மேம்பாலம் உள்ளிட்ட மேலும் பல பாலங்களும் முழுமையாக இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில் இன்று அவசர, அவசரமாக திறந்து வைக்கப்படுகின்றன.