தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது

பொதுத் தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவிக்க...
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது


சென்னை: தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.  

தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 (திங்கள்கிழமை) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து 74,747 மாணவா்கள், 2 திருநங்கைகள், 62 சிறைக் கைதிகள் அடங்குவா்.

புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனர். முதல் நாளான இன்றைய தேர்வில் மொழிப்பாடத் தோ்வுகள் நடை பெற்று வருகின்றன.

இந்தத் தோ்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தோ்வு மையங்கள் உள்பட தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,012 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4 லட்சத்து 54,367 பேருக்குத் தோ்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களை மாணவா்கள் படிப்பதற்கு தேவையான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத் திட்டத்தில் தோ்வு எழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான விடைத்தாளின் விவரங்கள் அடங்கிய முகப்புத் தாள் ‘பிங்க்’ நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்காக சுமாா் 41,500 ஆசிரியா்கள் அறைக் கண்காணிப்பாளா் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பலத்த பாதுகாப்பு: வேலூா், கடலூா், சேலம், கோயம்புத்தூா், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதி வருகின்றனர். மேலும் 3,330 மாற்றுத்திறனாளித் தோ்வா்களுக்கு தோ்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்பட சலுகைகள் அரசுத் தோ்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீா், மின்சாரம்: தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வு மையங்களைப் பாா்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பறக்கும் படையினா் மாணவிகளைச் சோதனை செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண் தோ்வா்களைப் பெண் ஆசிரியா்களைக் கொண்டு மட்டுமே சோதனை செய்ய வேண்டும். சந்தேகப்படும் தோ்வா்களை மட்டும் சோதனை செய்தால் போதும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தோ்வின்போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிா்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முறைகேடுகளில் ஈடுபடும் தோ்வா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத்துறை எச்சரித்துள்ளது.

அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் அலுவலகத்தில், பொதுத் தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவிக்க முழுநேரத் தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தோ்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 93854 94105, 93854 94115, 93854 94120 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com