/

பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 1:04 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று கூறுவீர்களேயானால், தீண்டியபின் உங்களுக்கு அது உண்மை என்று தெரியும். அதனால், தீண்ட விடாதீர்கள். தீண்ட விட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள். இல்லை அது விஷமல்ல என்று நம்பினால் நிரந்தரமாக தூங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா காங்கிரஸ் தலைவர் மோடி குறித்துப் பேசிய விடியோவினை ட்விட்டரில் பகிர்ந்து கூறியதாவது: மரணத்தின் வியாபாரி என சோனியா காந்தி தொடங்கியது தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமரை விஷம் நிறைந்த பாம்பு போன்றவர் எனக் கூறியதில் முடிவடைந்துள்ளது. இது எப்படி முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் தங்களது வெறுப்புகளை வெளிப்படுத்துவதில் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளனர். கர்நாடகத் தேர்தலில் தோல்வியடைவோம் எனத் தெரிந்ததாலேயே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பாஜக பாம்பு போன்றது என்றும், அதன் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தான் கூறினேன். அதன் சித்தாந்தத்தை ஆதரித்தால் இறப்பு உறுதி. நான் அவருக்கு ( பிரதமர் மோடி) எதிராக எதுவும் பேசவில்லை. நான் தனிப்பட்ட நபர் மீது ஒருபோதும் எனது விமர்சனத்தை முன்வைக்க மாட்டேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.