
விஜயின் அரசியல் அறிவிப்பிற்கு பிறகு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நன்கொடை தர முன்வந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, உதயநிதியின் கருணை பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதால் திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் அவர்கள் பக்கம் போய்விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகத் தான் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடியை உதயநிதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு வேண்டும் என போராடி வருகின்றனர்.இதற்கெல்லாம் ஏன் உதயநிதி ஸ்டாலின் மனம் உருகவில்லை? இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ பணியிடங்கள் காலியாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அவர்களை அழைத்து பேசக் கூட மறுக்கிறார். இது போன்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அவசியம் வழங்க முன்வர வேண்டும் அது பற்றி உதயநிதி ஸ்டாலின் ஏன் வாய்திறக்க வில்லை?.
நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் வயது முதிர்ந்து பென்ஷன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் கணக்கெடுத்து உரிய பென்ஷனை வழங்க உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை? ஒலிம்பியாட் மற்றும் கேலோ போன்ற பிரம்மாண்டமான விழாக்களை நடத்தினால் மட்டும் போதாது. ஏராளமான இளைஞர்கள் கிராமப்புறங்களில் போதிய வாய்ப்பின்றி விளையாட்டுகளில் பிரகாசிக்க முடியாமல் உள்ளனர் அவர்களை கண்டறிந்து உதயநிதி ஸ்டாலின் உரிய வாய்ப்பு வழங்க ஏன் முன்வரவில்லை?.
அரசு துறைகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களே இல்லை என்ற நிலை நிலவுகிறது அதையெல்லாம் சரிசெய்ய உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை? 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதை காற்றில் பறக்க விட்டு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய (ரெட் ஜெயின் மூவிஸ்) திரைத்துறைக்கு தானாக முன்வந்து உதவி செய்வது சரியா? என யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.