32 வயது இளைஞரின் உயிரை உறிஞ்சிக் குடித்த எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷின்!

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினால் உறிஞ்சப்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைய டியூட்டி டாக்டரின் அலட்சியமும், வார்ட் பாயின் கவனக்குறைவுமே காரணம் எனக்கருதி தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
32 வயது இளைஞரின் உயிரை உறிஞ்சிக் குடித்த எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷின்!

ராஜேஷ் மாரு, 32 வயது இளைஞர். கடந்த சனிக்கிழமையன்று தனது மூத்த சகோதரியின் மாமியாருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டிருந்ததால், உடல்நலமற்ற அவரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு மருத்துவமனையில் தனது சகோதரிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வதற்காக தனது மைத்துனருடன் மும்பையின் இருக்கும் BYL நாயர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். 

<sup>பலியான இளைஞர் ராஜேஷ் மாரு...</sup>
பலியான இளைஞர் ராஜேஷ் மாரு...

அங்கே, அதே மருத்துவமனையிலேயே முன்னதாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஷின் சகோதரியின் மாமியாரான லக்‌ஷ்மி சோலங்கிக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பு அங்கிருந்த டியூட்டி டாக்டர் இடம் ஆக்ஜிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்குள் எடுத்துச் செல்லலாமா? என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். ஏனெனில் எம் ஆர் ஐ ஸ்கேன் அறைக்குள் உலோகப் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்பதால்; ஆனால், அப்போது ஸ்கேன் அறைக்கான வார்ட்பாய், ஸ்கேன் அறைக்குள் பரிசோதனை மெஷின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால், அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக்கூறி ஆக்ஸிஜன் சிலிண்டரை உள்ளே கொண்டு செல்ல அனுமதி அளித்திருக்கிறார். 

இவர்களுக்கு 7.30 மணியளவில் ஸ்கேன் நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், மருத்துவர் அவர்களை உடனடியாக  ஸ்கேன் அறைக்குள் சென்று காத்திருக்குமாறும், தான் 10 நிமிடங்களில் பரிசோதனை அறைக்குள் வந்து விடுவதாகவும் கூறி விட்டு அவரது மற்ற வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார். மருத்துவர் ஆலோசனையின் பேரில், வார்ட் பாய் கூறியவாறு லக்‌ஷ்மி சோலங்கிக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தனது மைத்துனருக்குப் பதிலாக ராஜேஷ் மாரு ஸ்கேன் அறைக்குள் நுழைந்திருக்கிறார். நோயாளியின் மகனும், ராஜேஷின் மைத்துனருமான ஹரிஷ் சோலங்கி தனது விரலில் இருந்த மோதிரத்தை கழற்ற இயலாததால் அவருக்குத் தன் தாயாருக்கு உதவியாக ஸ்கேன் அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ஹரிஷுக்குப் பதிலாக ராஜேஷ் ஆகிஸிஜன் சிலிண்டருன் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று என்கிறார்கள் அவர்களுடன் இருந்த உறவினர்கள். 

ராஜேஷ் ஸ்கேன் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் உடனடியாக எம் ஆர் ஐ ஸ்கேனின் மின் காந்தப் புலங்களால் அதி விரைவுடன் இழுக்கப்பட்டு கையிலிருந்த ஆக்ஜிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டார். அதிக விசையுடன் உறுஞ்சப்பட்ட வேகத்தில் அவரது கை சிலிண்டருக்கு அடியில் சிக்கிக் கொள்ள சிலிண்டர் லீக் ஆகத் தொடங்கி மொத்த ஆகிஸிஜனும் ராஜேஷின் சுவாசக்குழாயினுள் வலுக்கட்டாயமாக நிரம்பத் தொடங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷ் மிக ஆபத்தான நிலையைச் சென்றடைந்தார். அங்கு அப்போது, வார்ட்பாய் அறிவித்திருந்தபடி ஸ்கேன் அறையில் மெஷின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது துரதிருஷ்டமான விஷயம். விபரீதத்தை உணர்ந்த மருத்துவமனைப் பணியாளர்கள் உடனடியாக ராஜேஷை மீட்க விரைந்தாலும் அவரை உயிருடன் மீட்க இயலவில்லை. ஸ்கேன் மெஷினில் இருந்து ராஜேஷை விடுவித்து அருகில் இருக்கும் ஜெ ஜெ மருத்துவமனைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க எடுத்துச் சென்ற போதும், சுவாசப் பையில் நிரம்பியிருந்த அதிகப்படியான ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக உடல் வீக்கமடைந்து ஊதிப்போய் அங்கு சென்ற 10 நிமிடங்களுக்குள்ளாக ராஜேஷ் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார் என்றிருக்கிறார் அங்கிருந்த பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர்.

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினால் உறிஞ்சப்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைய டியூட்டி டாக்டரின் அலட்சியமும், வார்ட் பாயின் கவனக்குறைவுமே காரணம் எனக்கருதி தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதில் பரிதாபகரமான விஷயம் என்னவென்றால், ராஜேஷ் மாருவின் அம்மா காலாவின் தேற்ற முடியாத அழுகை. மகனது துர் மரணத்தைக் கேள்விப் பட்டதில் இருந்து அவருக்கும் உடல்நிலை மோசமாகி விட மருத்துவமனை சிகிச்சையிலிருப்பதாக தகவல். அது மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தைப் பொறுத்தவரை ராஜேஷுக்கு மூன்று சகோதரர்களும், மூன்று மூத்த சகோதரிகளும் இருப்பதாகக் கேள்வி. அவர்களுள் தனது இளைய மகனே தனது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு குடும்பத்தின் மீதி மிகுந்த பற்று கொண்டு தன் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கக் கூடியவர். அவர் ஒருவரை நம்பியே நானும் எனது மனைவியும் வாழ்ந்து வந்தோம். இனி எங்கள் மகனுக்கு நாங்கள் எங்கே போவோம்’ அவனுக்கு திருமணத்திற்காகப் பெண் பார்க்கலாம் என்று கூறும் போதெல்லாம், வேண்டாம், இந்தச் சிறிய வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடியாது. கொஞ்சம் பெரிதாக வீடு கட்டிக் கொண்டு பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவன் சமீபகாலமாகத் தான் 32 வயதாகி விட்டதே என்று திருமணத்திற்கு வரன் பார்க்க ஒப்புக் கொண்டிருந்தான். அதற்குள் இப்படியாகி விட்டதே! நான் என்ன செய்வேன் என்று கதறி அழும் அவரது தாயாரைத் தேற்றுவார் யாருமில்லை.’

எம் ஆர் ஐ ஸ்கேன் என்பது அதிக விசை கொண்ட மின்காந்தப் புலங்களால் உடலை ஊடுருவி உடலுக்குள் இருக்கும் நோய்க்குறைபாடுகளைக் கண்டறியும் முறை. இந்த ஸ்கேன் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவர், பரிசோதனக்குள்ளாகும் நோயாளி மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் மற்றும் ஸ்கேன் அறைக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டு விதிகள் உள்ளிட்டவற்றைப் பற்றி அறிவுறுத்த வேண்டும் என்கின்றன மருத்துவ விதிகள். ஆனால் ராஜேஷின்  வழக்கிலோ அவரது மருத்துவர் எந்த விதமான எச்சரிக்கைகளையும் அவர்களுக்கு அளித்ததாகத் தெரியவில்லை என்கின்றன வழக்கு குறித்த விவரங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com