சட்டப்பேரவைத் தேர்தல்: ஐந்து முனைப் போட்டியில் பஞ்சாப்

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
சட்டப்பேரவைத் தேர்தல்: ஐந்து முனைப் போட்டியில் பஞ்சாப்


உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4இல் பாஜகவும், ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் தற்போது ஆட்சியில் உள்ளன. 
கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உ.பி.,  தில்லியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த நவ. 19 இல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்குக் காரணம்,  5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்தான் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர். 

குறிப்பாக பெருமளவிலான பஞ்சாப் மாநில விவசாயிகள், தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக தில்லியில் தங்கியிருந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பஞ்சாப் மாநில மக்களின் வாக்குகள் எந்தக் கட்சிக்கு விழும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து விட்டது. 

2017 தேர்தல் நிலவரம்: பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 பேரவைத் தொகுதிகளில் குறைந்தது 59 தொகுதிகளில் வெல்லும் கட்சியே அங்கு ஆட்சியமைக்க இயலும். கடந்த 2017இல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 77 தொகுதிகளில் வென்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அத் தேர்தலில் 38.5 % வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது. 
இரண்டாமிடம் பெற்ற ஆம் ஆத்மி கட்சி 77 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான லோக் இன்சாஃப் கட்சி (எல்ஐபி) 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2  தொகுதிகளிலும் வென்றன. ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு 24.9 % வாக்குகள் கிடைத்தன. 

மூன்றாமிடம் பெற்ற அப்போதைய ஆளும்கட்சியான சிரோமணி அகாலிதளம் (பாதல் பிரிவு) கட்சி 94 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்றது. (பெற்ற வாக்குகள் 25.2 %) அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வென்றது. (5.4 % வாக்குகள்). 
இவை தவிர, பகுஜன் சமாஜ் கட்சி 1.5 % வாக்குகளும், சுயேச்சைகள் 2.1 % வாக்குகளையும் பெற்றன. தேர்தலின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அமரீந்தர் சிங் 2017 மார்ச் 16இல் முதல்வராகப் பொறுப்பேற்றார்.  
தற்போதைய கூட்டணிகள்: 2012ஆம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் கட்சியின் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தார். ஆனால் 2017இல் முதல்வரான அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக 2021 செப். 18இல் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராகப் பொறுப்பேற்றார். 
அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங், தற்போது "பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி விட்டார். தவிர, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாகவும் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் இம்முறை  பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. சிரோமணி அகாலிதளம் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.   காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை அனைத்து (117) தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. 
இவை தவிர, லோக் இன்சாஃப் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, நவான் பஞ்சாப் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து பஞ்சாப் ஜனநாயக கூட்டணி (எல்டிஏ) என்ற பெயரில் தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆக, பஞ்சாப் மாநிலத் தேர்தலில்  5 முனைப் போட்டி உறுதியாகி விட்டது.  

யாருக்கு வெற்றி வாய்ப்பு?  கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் 38.5 % வாக்குகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தூணாகக் கருதப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங் அக்கட்சியை விட்டு வெளியேறியிருப்பது அக்கட்சிக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. அவர் தனக்கு காங்கிரஸ் கட்சியால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். 

ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாகப் பணியாற்றினாலும், அக்கட்சிக்குப் பெரும் சவாலாக இருப்பது உள்கட்சிப்  பூசல்தான். காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னிக்கும் இடையிலான பனிப்போர் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர்கள் சோனியா, ராகுலை மட்டுமே காங்கிரஸ் நம்பி இருக்கிறது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக கடைப்பிடித்து வந்த முரட்டுப் பிடிவாதத்தை விவசாயிகளின் பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகே மத்திய அரசு கைவிட்டது. இது அங்குள்ள விவசாயிகளிடையே பாஜகவுக்கு எதிரான அலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமரீந்தர் சிங் தங்களது கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அவர் மீதான அனுதாபத்தின் பின்னணியில் அந்த எதிர்ப்பைத் தனித்துவிடமுடியும் என்று பாஜக கருதுகிறது. 

2012-இல் ஆட்சியைக் கைப்பற்றிய சிரோமணி அகாலிதளம் கடந்த 2017 தேர்தலில் 25.2 % வாக்குகளுடன் இரண்டாமிடம்  பெற்று ஆட்சியை இழந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் விலகியதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அகாலிதளம் கட்சி விலகியதும் பஞ்சாப் வாக்காளர்களிடையே நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தவிர, இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி காரணமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கருதுவதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என சிரோமணி அகாலிதளம் நம்புகிறது. 
கடந்த தேர்தலில் 23.7 % வாக்குகளுடன் மூன்றாமிடம் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியும் அந்த மாநிலத்தில் அபரிமிதமாக உள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் அமல்படுத்திய மின்கட்டண உயர்வையும், வாட் வரி உயர்வையும் முன்னிலைப்படுத்தி அக்கட்சி பிரசாரம் மேற்கொள்கிறது. 

கடந்த ஜூன் மாதத்தில் சண்டீகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சித்  தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றிபெறச் செய்தால் பஞ்சாப் முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ. 1,000 வீதம் வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

கேஜரிவாலின் அறிவிப்புகள் பஞ்சாப் மாநில மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்முறை கட்டாயம் வெற்றியை வசப்படுத்தியாக வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.   

பஞ்சாப் ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு சதவீதம் இல்லாததால் இக்கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது சந்தேகமே. இருப்பினும், இந்தக் கூட்டணியினர் சில தொகுதிகளில் வாக்குகளை கணிசமாகப் பிரிக்கும் பட்சத்தில், முக்கிய கட்சிகளின் வெற்றி பாதிப்படைய வாய்ப்புள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய அமைப்புகள் இப்போது ஒருங்கிணைந்து ஓர் அணியாகத் தேர்தல் களம் காண இருப்பதாக அறிவித்திருக்கின்றன. விவசாயிகளின் வாக்குகள் ஏனைய அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்காமல் போனால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. அதே நேரத்தில், பாஜகவுக்கு எதிர்ப்பான விவசாயிகளின் வாக்குகள் காங்கிரஸ், அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கணிசமாகக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை எனும்போது, நிலைமை எப்படி மாறும் என்பதையும் முன்கூட்டியே சொல்ல முடியாது.
மொத்தத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, அங்கு தேர்தல் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com