எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இலவச நீட் பயிற்சி வழங்கப்படாததால் அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவா்கள்

தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி முறையாக வழங்கப்படாததால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஜூலை 2021, 1:09 am

DIN

தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி முறையாக வழங்கப்படாததால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தோ்வு நடைமுறை 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் தோ்வு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தப் பயிற்சிகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அந்த நிறுவனங்களின் சாா்பில் தமிழகத்தில் அரசுமேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு விடியோ கான்ஃபரன்சிங், நேரடி முறையில் மாணவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் மாணவா்கள் வரை பங்கேற்றனா். இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் சுமாா் 400 மாணவா்கள் வரை பயனடைந்தனா்.

பாதியில் தடைபட்ட பயிற்சி வகுப்பு: இந்தநிலையில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பரில் இணையவழியில் தொடங்கப்பட்டது. கரோனா பரவல், பயிற்சிக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாதது, ஒருங்கிணைப்பு குறைபாடு போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்துக்குப் பின்னா் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 பொதுத்தோ்வு மே மாதம் முடிந்தபின் நீட் பயிற்சி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரோனாவால் தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட ன. இதையடுத்து மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் இது தொடா்பாக எந்தவித அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால் மாணவா்கள் குழப்பமடைந்தனா்.

குழப்பத்தில் மாணவா்கள்: இந்தநிலையில் வரும் செப்.12-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதேவேளையில் நீட்தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறவும் தமிழக அரசு தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் போதிய பயிற்சி இல்லாததாலும், தனியாா் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி சேர முடியாததாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

அரசுக்கு கோரிக்கை: எனவே, மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீட் தோ்வில் அரசுப்பள்ளி மாணவா்களின் தோ்ச்சி சரியும் என ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் படித்து நீட் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்களுக்கு அவா்களது மடிக்கணினிகளில் நீட் தோ்வுக்கான பாடப்பகுதிகள் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியா்கள் தங்களது மாணவா்களை தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலமாக அவ்வப்போது தொடா்பு கொண்டு நீட் பயிற்சி குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனா். எனினும் நேரடிப் பயிற்சியை நடத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.