நிலவில் 'உச்சா' போன மனிதர் யார்?

அப்போலோ விண்கலத்தில் சென்று நிலவில் மனிதன் இறங்கி, இன்றுடன், 52 ஆண்டுகளாகின்றன. 1969 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் (ஜூலை 20) நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் நிலவை வென்றனர்.
நிலவில் ஆல்ட்ரின்
நிலவில் ஆல்ட்ரின்
Published on
Updated on
3 min read

நிலவில் கால் வைத்து நடந்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். எல்லாருக்கும் தெரியும், ஆனால், 'உச்சா' போனவர் யார் தெரியுமா?

அப்போலோ விண்கலத்தில் சென்று நிலவில் மனிதன் இறங்கி, இன்றுடன், 52 ஆண்டுகளாகின்றன. 1969 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் (ஜூலை 20) நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் நிலவை வென்றனர். 1969 ஜூலை 16 ஆம் நாள் கேப் கென்னடி ஏவுதளத்திலிருந்து நிலவுக்குச் செலுத்தப்பட்டது அப்போலோ 11. 

(இடமிருந்து வலம்) நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், ஆல்ட்ரின்,  
(இடமிருந்து வலம்) நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், ஆல்ட்ரின்,  

நிலவில் முதன்முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங்தான் இறங்கிக் கால்பதித்து நடந்தார். நிலவில் கால் பதித்தபோது, ஒரு மனிதனுக்கு இது [ஒரு] சிறிய அடி, மனித குலத்துக்குப் பெருந்தாவல்! என்று குறிப்பிட்டார். மகிழ்ச்சி கலந்த பதற்றத்தில், தான் தயாரித்துவைத்திருந்த வரியில், 'ஒரு' என்பதைச் சொல்ல விட்டுவிட்டார். நிலவின் தரைப் பரப்போ, மிருதுவாகவும் துகள்களாகவும் இருப்பதாக விவரித்தார் ஆம்ஸ்ட்ராங். 20 நிமிஷங்களுக்குப் பிறகு ஆல்ட்ரினும் அவருடன் சென்று சேர்ந்துகொண்டு நிலவில் நடந்தார். 

மைக்கேல் காலின்ஸ், ஆல்ட்ரின்
மைக்கேல் காலின்ஸ், ஆல்ட்ரின்

நிலவுப் பயணத்தின் மூன்றாவது வீரரான மைக்கேல் காலின்ஸ், கொலம்பியா விண்கலத்தில் இருந்தவாறே 28 மணி நேரம் தகவல் தொடர்பாளராகச் செயல்பட்டதுடன் நிலவின் தரைப் பரப்பையும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.

நிலவின் கடினமான தரையில் அமெரிக்கக் கொடியை நடுவதற்கு சிரமப்பட்ட வீரர்கள், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கொடி சாய்ந்துவிடுமோ என்று பதற்றத்தில் இருந்திருக்கின்றனர்.

(இடமிருந்து வலம்) ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ்.
(இடமிருந்து வலம்) ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ்.

கிறிஸ்துவரான ஆல்ட்ரின், நிலவில் கலம் இறங்கியதும் விவிலியத்திலிருந்து சில வரிகளைக் கூறினார்.

நிலவில் முதன்முதலாகக் கால் வைத்து நடந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்தான் என்றாலும் நிலவில் சிறுநீர் கழித்தவரை யாருக்கும் தெரியாது, அவர் ஆல்ட்ரின்! பல லட்சக்கணக்கானோர் ஒருபுறம் நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய விண்வெளிச் சிறப்பு உடைக்குள் பொருத்தப்பட்டிருந்த விசேஷ குழாய்வழியே உச்சா போனார் ஆல்ட்ரின்.

அப்போலோ 11 செயல்திட்டத்தில் பங்கேற்ற வீரர்கள்
அப்போலோ 11 செயல்திட்டத்தில் பங்கேற்ற வீரர்கள்

முதன்முதலாக நிலவில் மனிதர்கள் இறங்கியபோது அங்கே ஆமால்கொலைட் (மூன்று வீரர்களின் பெயர்களையும் இணைத்துச் சூட்டப்பட்ட பெயர்!) என்றொரு கனிமம் கண்டெடுத்து வரப்பட்டது. பின்னால் பூமியில் பல்வேறு இடங்களிலும் இந்தக் கனிமம் கண்டறியப்பட்டது.

நிலவில் நடந்துவிட்டு வந்த பிறகு இரு வீரர்களும் தங்கள் ஹெல்மெட்களைக் கழற்றியதும் ஒரு கடுமையான வாசனையை உணர்ந்தனர். இதைத் தீப்பற்றியெரிந்த இடத்தில் நீரூற்றி அணைக்கப்பட்ட சாம்பலின் வாசனையைப் போலிருப்பதாக நீல் ஆம்ஸ்ட்ராங் குறிப்பிட்டார். ஆல்ட்ரினோ பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தின் வாசனை என்றார். உள்ளபடியே அந்த வாசனையோ அவர்களின் காலணிகளில் ஒட்டிக்கொண்டுவந்த நிலவின் மண்வாசனை!

பூமிக்குத் திரும்பும் கலனுக்கு வந்ததும் தெரியாத்தனமாக எந்திரங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச்சை உடைத்துவிட்டார் ஆல்ட்ரின். முதலில் கவலைப்பட்டாலும் பின்னர் ஒரு பால்-பாயிண்ட் பேனாவின் உதவியுடன் இயக்கிவிட்டனர்!

1981 வரையிலும், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் மிக அதிக அளவிலானோர் - 60 கோடி பேர் - பார்த்தது, நிலவில் அப்போலோ 11 விண்வெளிப் பயணிகள் இறங்கியதைத்தான்! இந்த உலக சாதனையை, 1981-ல், 75 கோடி பேர் பார்த்த வேல்ஸ் இளவரசர் - டயானா திருமணக் காட்சி  முறியடித்தது.

நிலவில் ஆல்ட்ரின்
நிலவில் ஆல்ட்ரின்

நிலவிலிருந்து பூமிக்குத் திரும்பியதும் ஏதேனும் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீரர்கள் மூவரும் மூன்று வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்! (தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்னவென்று எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்தானே!).

அமெரிக்காவுக்கு முன்னரே ரஷியர்கள் நிலவுக்குச் சென்றுவந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

இவை எல்லாமே டுமீல்! நிலவில் அமெரிக்கர்கள் இறங்கியதாகக் கூறப்படுவது - காட்டப்பட்டது அனைத்துமே புனைந்து நிகழ்த்தப்பட்ட ஒன்றுதான் என்றொரு  வலுவான கருத்தும் இருக்கிறது.

[1969, ஜூலை 20 - நிலவில் மனிதர்கள் இறங்கிய நாள்]

படங்கள்: நாசா இணையதளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com