தலிபான் தலைவர் எப்போது வெளியே வருவார்?

வல்லரசுகள் உள்பட உலகத்தையே அதிரவைக்கும் தலிபான்களின் தலைவர் உள்ளபடியே எங்கே இருக்கிறார்?
ஹிபத்துல்லா அகுந்த்ஸடா
ஹிபத்துல்லா அகுந்த்ஸடா

வல்லரசுகள் உள்பட உலகத்தையே அதிரவைக்கும் தலிபான்களின் தலைவர் உள்ளபடியே எங்கே இருக்கிறார்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவிவரும் அரசியல் மாற்றங்கள் உலகம் முழுவதும் முக்கியக் கவனம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அங்கு நிலவி வரும் சமூக சூழல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்நாட்டின் அரசியல் கடிகாரம் பின்னோக்கி சுழலத் தொடங்கிவிட்டது எனலாம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உருவாக்கம் என்பது அந்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

தலிபான்கள் என்கிற அமைப்பு உருவானபோது அந்த அமைப்பு அந்நாட்டின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் என யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் காலம் அவர்களின் கைகளில் வந்தமர்ந்துள்ள இந்த நிலையில் அவர்களால் எப்படி இதனை செய்து முடிக்க முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது. தலிபான்கள் உண்மையில் ஒரே அமைப்பு அல்ல.

ஆனால் அவர்களை ஒருங்கிணைக்கும் குரல் ஒன்றே. இன்றைக்கு ஒரு நாட்டையே தங்களின் காலுக்குக் கீழ் வைத்திருந்தாலும் அவர்களை வழிநடத்தும் அந்தக் குரல் இன்றும் வெளியில் வந்து பேசவில்லை. தலிபான்களின் கட்டளை சாசனமான அந்தக் குரல் யாருடையது? ஏன் அந்தக் குரலின் சொந்தக்காரரை உலகம் தேடிக் காத்திருக்கிறது?

ஹிபத்துல்லா அகுந்த்ஸடா - தலிபான்களை வழிநடத்தும் மூளையின் குரல். அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளின் தொடர் தாக்குதல்களால் தவித்துவந்த தலிபான் அமைப்பை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கலங்கரை விளக்காக இருந்து வழிநடத்திவருபவர் அகுந்த்ஸடா. தலிபான்களால் செல்லமாக விசுவாசிகளின் தளபதி என அழைக்கப்படுபவர். 

தலிபான்களின் தலைவர் முல்லா உமர் கொலை செய்யப்பட்ட பிறகு அரசுக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார் அகுந்த்ஸடா. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார் அவர். அகுந்தஸடாவின் செயல்பாடுகள் மிக ரகசியமாகவும் அதேசமயம் தீவிரமாகவும் அமலாக்கப்பட்டது. இது தலிபான்களின் கை ஓங்குவதற்கு உதவி புரிந்துள்ளது.

அகுந்த்ஸடா எப்படி இருப்பார் என உலகின் பல்வேறு உளவுத் துறைகள் நோட்டமிட்டு வரும் நிலையில் இதுவரை அவரைக் குறித்து ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளிவந்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார்? இதுவரை ஏன் வெளி உலகிற்கு வரவில்லை என்பது குறித்தெல்லாம் ஆயிரம் கேள்விகளும் கதைகளும் உலவி வருகின்றன.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு அகுந்த்ஸடா வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் கூட அவர் தலைமறைவாக இருப்பது மேலும் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

கடந்த வாரம் அகுந்த்ஸடா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “கடவுளின் விருப்பப்படி நீங்கள் அவரை விரைவில் பார்ப்பீர்கள்" என்றது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தலிபான்களின் மறைந்த தலைவர் முல்லா உமர் வழியைப் பின்பற்றும் அகுந்த்ஸடா அவரைப் போலவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். உமர் 1990-களில் ஆட்சியில் இருந்தபோது காபூலுக்கு அரிதாகவே பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தகைய தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. 

அதேசமயம் அகுந்த்ஸடா கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானதாகவும், குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் இருவேறு வதந்திகள் உலவுகின்றன. தலிபான்கள் முல்லா உமரின் மரணத்தை மறைத்ததைப் போல் அகுந்த்ஸடாவின் மரணத்தையும் மறைத்து வருகின்றனர் என்கிற தகவல்களும் சொல்லப்படுவதுண்டு.

பல்வேறு பிரிவுகளைக் கொண்ட தலிபான்கள் அமைப்பில் ஆட்சிப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வது, அதிகாரப் போட்டி என எழும் சிக்கல்களைத் தீர்க்கவாவது அகுந்த்ஸடா தனது தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள இந்த சூழலில் அகுந்த்ஸடாவின் வருகை அவசியமானதாகவும், அதுவே பல்வேறு முடிச்சுகளுக்கான பதில்களாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com