வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு என்ன தெரியுமா?

நாட்டில் உள்ள வங்கிகள் ஏற்கனவே உள்ள அதன் லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்
வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு என்ன தெரியுமா?

நாட்டில் உள்ள வங்கிகள் ஏற்கனவே உள்ள அதன் லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவுறுத்தியுள்ளது. 

தற்போதுள்ள அனைத்து லாக்கர் வாடிக்கையாளர்களும் புதிய லாக்கர் வைத்துக்கொள்ளவதற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023க்கு முன்பாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

இது குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் முதன்முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 

இந்நிலையில், ஜனவரி 1, 2023-க்குள் வங்கிகள் ஏற்கனவே இருக்கும் லாக்கர் வாடிக்கையாளர்களுடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிகள் ஏற்கனவே இருக்கும் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்கள் உடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பித்து தகுதி சான்று வழங்கவேண்டும். புதிய லாக்கர் விதிகள் அந்த தேதியில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்கும்போது அந்த வாடிக்கையாளரிடம் வங்கி முத்திரையிடப்பட்ட காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டும், ஒப்பந்த பாத்திரத்தின் ஒரு நகலை வாடிக்கையாளரிடமும், அசல் வங்கியின் கிளையிலும் இருக்க வேண்டும். 

வங்கிகள் லாக்கர்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாள்கள் லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் மற்றும் வங்கியின் பொதுவான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை கட்டாயம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. 

மேலும், வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் எந்தவொரு "நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளும்" லாக்கர் ஒப்பந்தங்களில் இணைப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்யவும். அத்துடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான வணிகப்போக்கில் தேவைப்படுவதை காட்டிலும் கடுமையானதாக இருக்காது என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 

வழிகாட்டுதலின்படி, எந்தவொரு வாடிக்கையாளரும் தனது லாக்கரை அனுமதி இல்லாமல் அல்லது அதிகாரமும் இல்லாமல் திறக்கப்பட்டிருப்பதாக வங்கியில் புகார் கொடுத்தாலோ அல்லது திருட்டு அல்லது பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக தெரிவித்தாலோ, போலீஸ் விசாரணை முடியும் வரை வங்கிகள் சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.

வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருள்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். 

லாக்கரிகளில் சட்டத்திற்குப் புறம்பான பொருள்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும். 

வங்கிகள் வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சிசிடி விதிமுறைகளுடன் முழுமையான இணைவு அளிப்போருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். மேலும், வங்கி தனது வாடிக்கையாளர்கு மட்டும் அல்லாமல் வங்கிக்கு தொடர்பில்லாத பிற வாடிக்கையாளர்க்கும் லாக்கர் வசதியை அளிக்கலாம். 

வங்கிகள் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக, அதனதன் இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும்.  

லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்கப்பட வேண்டும். 

வங்கி இணைப்பு, வங்கி கிளை வேறு இடத்திற்கு மாற்றம் மற்றும் வங்கி கிளை மூடப்படுவது போன்ற ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால் வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட இரண்டு செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இதுகுறித்த தகவல்கள் அறிவிக்கப்பட வேண்டும். 

லாக்கர் வாடிக்கையாளர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கான முன் வைப்புத் தொகையை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்தவில்லை என்றால் அவர்களது லாக்கரை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. 
 
வங்கி லாக்கர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருள்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்பட்டலோ, தொலைந்து போனாலோ, தீ அல்லது கட்டடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு வங்கி கட்டணத்தை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவு அல்லது வாடிக்கையாளர்களின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருள்களுக்கு ஏதேனும் சேதமோ அல்லது இழப்போ ஏற்பட்டால் வங்கி பொறுப்பாகாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com