சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் இதய நோய்களை தடுக்கும், கொலஸ்டிராலை குறைக்கும் ‘பழம்புளி’

புளி என்ற உடனே நம் நினைவுக்கு வருவது ‘ரசம்’ தான். தென்னிந்திய உணவு முறைகளில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது இந்த ரசம்.
சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் இதய நோய்களை தடுக்கும், கொலஸ்டிராலை குறைக்கும் ‘பழம்புளி’

புளி என்ற உடனே நம் நினைவுக்கு வருவது ‘ரசம்’ தான். தென்னிந்திய உணவு முறைகளில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது இந்த ரசம். மதிய உணவில் எது இருக்கிறதோ இல்லையோ, ரசம் இருந்தால் போதும் என்று ஏங்கும் நம்மவர்கள் ஏராளம். என்ன தான் வகை வகையாய் பல துரித உணவுகளோ, மேற்கத்தியோ உணவுகளோ விரும்பி பலரும் உண்டாலும் இறுதியில் ரசம் சாப்பிட்டால் தான் பலருக்கும் திருப்தியே. ‘அப்பாடா இப்ப தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கு’ என்று ரசத்திற்கு அடிமையானவர்கள் பலர்.

அதற்கென்ன காரணம்? புளிப்பு சுவை மட்டுமா? இல்லை. அதன் மருத்துவ தன்மையும் தான். ரசம் சாப்பிட்டால் தான் சீரணம் ஆகும் என்று ரசத்தை உணவாக மட்டும் பார்க்காமல், அசீரணத்தை போக்கும் மருத்துவ குணமாகவும் கூறுவது நம் பாரம்பரிய சித்த மருத்துவம். 

‘ரசம்’ என்ற சொல்லுக்கு ‘சாறு’ என்று பொருள். அப்படி பார்த்தால் புளி சாறு என்பதே  பின்னாளில் புளி ரசம் என்று மாறி, பிறகு வெறும் ‘ரசம்’ என்று திரிந்துள்ளதாக தெரிகிறது. ரசத்தில் பல வகைகள் இருப்பினும் அவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் புளி தான். 

சர்க்கரை வியாதி வந்தவுடனே அத்துடன்  ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் மாறுபட்டு ‘டிஸ்லிபிடிமியா’ என்ற நோய் நிலையும் தொடங்கிவிடுகிறது. 

சர்க்கரைக்கு மருந்து எடுப்பது போதாது என்று இந்த கொழுப்பிற்கும் மருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 

டாக்டர் நான் சர்க்கரை வியாதிக்கு தானே மருத்துவம் பார்க்க வந்தேன், கூடவே ஏன் கொலெஸ்டிரால்-க்கு மாத்திரை கொடுத்து இருக்கீங்க? என்று பலரும் கேட்க நினைத்து, டாக்டர் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று எண்ணி எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவர். 

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பல நாள்களாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. ஆதலால் மதுப்பிரியர்கள் அத்தகைய மருந்துகளை எடுப்பதும் மிகவும் ஆபத்தானது. அது அவர்களின் கல்லீரல் செயல்பாட்டில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலத்தான். ஆக கல்லீரலை பாதிக்காமல், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, கொழுப்பினையும் குறைக்கும் ஒரே மருந்து இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதுவும் உண்ணும் உணவு பொருளாக இருந்தால் இன்னும் வசதி. அந்த வகையில் இந்த ‘பழம்புளி அல்லது கோடாம்புளி’ மிக சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியது.

இன்று நாம் உணவில் பயன்படுத்தும் புளி, வாத நோய்களை உண்டாக்குவதாகவும், உணவிற்கு ஆகாது என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. “புத்தியும் மந்தமாகும் பொருமியும் உடல் ஊதும் பத்தியம் தவறும்” என்ற தேரையர் குணவாகட வரிகளால் இதனை அறியலாம். 

கோடாம்புளி அல்லது பழம்புளி என்று அறியப்படும் புளியால் வாத நோய் நீங்கும், நோய்களை உண்டாக்கும் மூன்று குற்றங்களான வாதம்,பித்தம், கபம் இவையும் நீங்கும் என்பதை “பழம்புளியை சேர்க்க திரிதோடம் வாதமொடு சூலை கபம் மாறும்காண்” என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

அழகிய கோள வடிவ பழங்களைக் கொண்ட பழம்புளி, 5-8 பெரிய விதைகளுடன் காணப்படும். பழுத்தவுடன் பழம் அடர் ஊதா நிறத்தில் தோன்றும். பழுத்த கொடாம்புளியின் பழம் இனிப்பு அமிலசுவை கொண்டது. இது கார்சினோல், ஐசோகார்சினோல், மற்றும் கரிம அமிலங்கள் முக்கியமாக ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றது. கொடாம்புளியின் உலர்ந்த தோல் பாரம்பரியமாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஊதா நிறத்திற்கு காரணமான ‘ஆன்தோசயனின்’ எனும் மருத்துவ குணமுள்ள இயற்கை நிறமிசத்து உலக அளவில் வணிகத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள ‘ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம்’ (எச்சிஏ) எனும் வேதிப்பொருள் இயற்கை ஆன்டசிட் ஆக செயல்படக்கூடியது. அதாவது இயற்கையாகவே பசியை அடக்ககூடியது. ஆதலால் அதிகப்படியாக உண்ணும் பழக்கமுடைய நபர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இந்த புளியை பயன்படுத்த உடல் எடை குறைக்க உதவும். மேலும் எச்சிஏ என்பது அடினோசின் ட்ரைபாஸ்பேட்-சிட்ரேட் லைஸின் என்ற நொதியை தடுத்து  சிட்ரேட்டை எனும் வேதிப்பொருளை அசிடைல்-கோஎன்சைம்-ஏ ஆக மாற்றுவதற்கான தடையை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கொழுப்பு உற்பத்தி தடுக்கப்படுகிறது.

மேலும் பழம்புளிக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் ஆச்சர்யப்படுத்தும் வண்ணம் உள்ளது. இது உடல் எடையை குறைக்கும் தன்மையும், கொலெஸ்டெராலை குறைக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், மூட்டு வீக்கத்தை போக்கும் தன்மையும், மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், மன பதட்டம் நீக்கும் தன்மையும், புற்று நோய்களை வர விடாமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும், கிருமி கொல்லியாகவும் செயல்படக்கூடியது .

இதில் உள்ள அபிஜெனின் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் நிலையிலும், மூட்டு வீக்கத்திலும், மறதி நோயிலும்  நல்ல பலனளிப்பதாக உள்ளது. கார்சினால் என்ற செயல்மூலக்கூறு ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கும் விதமாகவும், மாரடைப்புக்கு காரணமான அதிரோகிளிரோசிஸ் எனும் ரத்த குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இருதயத்தை காக்கும் தன்மையுடையது. மேலும் இது அதிகரித்த ரத்த அழுத்தம் குறைய ஏதுவாகவும் உள்ளது. 
 
பழம்புளி என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோடாம்புளி நம் பயன்படுத்த மறந்த ஒன்று. இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் சொந்தமான இந்த கொடம்புளி குறித்து உலகம் முழுதும் பல நாடுகளில், பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவ தன்மையுள்ள சிறந்த உணவுப்பொருள். 

பழமையைத் தேடி, ஆரோக்கியத்தை நாடும் பலரும், பழம்புளியை தேடி உணவில் சேர்த்தாலே போதும் இருதயத்திற்கு இதம் தரும். நீரிழிவு நோயினருக்கு வாழ்நாளை கூட்டும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com