முடிவுக்கு வந்தது அற்புதம் அம்மாளின் நடை: வெளிவருமா, விசாரணை ரகசியங்கள்?

பேரறிவாளன் விடுதலையுடன் அற்புதம் அம்மாளின் நடைக்கும் முடிவு வந்திருக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால்!
வெளிவருமா, விசாரணை ரகசியங்கள்?
வெளிவருமா, விசாரணை ரகசியங்கள்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளனின் விடுதலையுடன் இன்று முடிவுக்கு வந்திருக்கும் அற்புதம் அம்மாளின் யுத்தம் தொடங்கியதும் அவர் அழைத்துச் செல்லப்பட்டதிலிருந்தேதான்.

1991 ஜூன் 11 ஆம் தேதியே மத்தியப் புலனாய்வுக் குழுவினரால் அழைத்துச்  செல்லப்பட்டபோதிலும் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியே ஏறத்தாழ பத்து நாள்களுக்குப் பிறகு ஜூன் 20 ஆம் தேதிதான்  வெளியே தெரிந்தது.

கைது செய்யப்பட்டபோது பேரறிவாளனுக்கு 20 வயது! மத்திய புலனாய்வுத் துறையினரால் 11 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டாலும் 19 ஆம் தேதிதான் செங்கல்பட்டு மாவட்ட நீதித் துறை நடுவர் வடிவேல் ரத்தினம் முன் நிறுத்தப்பட்டார்.

அன்று நீதிமன்றத்தில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் என்கிற அறிவுடன் ராபர்ட் பயஸையும் மத்திய புலனாய்வு அலுவலர் ரகோத்தமன்   நிறுத்தினார். இருவரையும் ஜூலை 12 வரை (ஏறத்தாழ 20 நாள்கள்) போலீஸ் காவலில் (நீதிமன்றக் காவலில் அல்ல) வைக்க நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

போரூரில் ராபர்ட் தங்கியிருந்ததாகவும் ராஜீவ் கொலைக்கு முன்பும் பின்பும் சிவராசனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தக் கொலைக்கு இவருடைய வீடு கேந்திரமாகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பகமாகத் தெரிய வருவதாக அப்போது சி.பி.ஐ. செய்திக் குறிப்பு தெரிவித்தது.

பேரறிவாளன் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பாக்கியநாதன் வீட்டில்தான் தங்கியிருந்ததாகவும் ராஜீவ் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேரறிவாளன் சென்னையில் தங்கி கம்ப்யூட்டர் படிப்பு படித்துவந்தார். ராபர்ட்டைப் போரூரிலும் அறிவைப் பெரியார் திடலிலும் கைது செய்ததாக சி.பி.ஐ. தெரிவித்தது.

இதற்கு இடைப்பட்ட நாள்களிலேயே  தன் மகனுக்கான அற்புதம் அம்மாளின் நடை தொடங்கிவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், 11 ஆம் தேதியே சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றுவிட்டனர். நீதிமன்றத்தில் அறிவை ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அன்று தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்திருக்கிறது, 31 ஆண்டுகள்! அற்புதம் அம்மாள் நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும்  தலைவர்களின் இல்லங்களுக்கும் போராட்ட களங்களுக்கும் என நடையாக நடந்திருக்கிறார்.

பேரறிவாளன் விடுதலையுடன் அற்புதம் அம்மாளின் நடைக்கும் முடிவு வந்திருக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால்!

ஜூன் 11 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையினரால்  அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பத்து நாள்களும் அதைத் தொடர்ந்து போலீஸ் காவலில் இருந்த நாள்களிலும் விசாரணையில் என்னென்ன நடந்தன , எப்படி நடந்தன என்பதெல்லாம், இனிமேல்தான், பேரறிவாளன் சொன்னால் தெரிய வரும்.

இதுவரையில் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வந்த விவரங்கள் பெரும்பாலும் அதிகார அமைப்பு சம்பந்தப்பட்டவர்கள் பகிர்ந்தவையே அல்லது தெரிவித்தவையே. தவிர, விசாரணை பற்றித் தெரிய வந்தவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கசிந்தவை அல்லது கசிய விடப்பட்டவையே.

இந்த நிலையில் பேரறிவாளன் போன்றவர்கள் வெளியே வந்து வெளிப்படை யாகப் பேசவோ, எழுதவோ தொடங்கும்போது விசாரணை நடத்தப்பட்ட விதம், விசாரணை அலுவலர்கள் நடந்துகொண்ட விதம் உள்பட ராஜீவ் கொலை தொடர்பான காத்திரமான விஷயங்கள் வெளிவரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com