சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகக் காரணம் என்ன?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்படுத்திய மனக் காயம் காரணமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து கட்டாய ஓய்வு நிலைக்குத் தள்ளப்படுள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

ஈரோடு: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்படுத்திய மனக் காயம் காரணமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து கட்டாய ஓய்வு நிலைக்குத் தள்ளப்படுள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1972 இல் கட்சியைத் துவங்கி 1977 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார். அப்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் உள்பட சிலர் வாய்ப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சரியான வேட்பாளர் இல்லாததால் ஆசிரியராகப் பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசனை தேர்தலில் நிறுத்தினார். அதில் வெற்றி பெற்ற அவரை கதர் துறை அமைச்சராக்கினார்.

1980இல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தபோது அப்போதைய எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்த நிதி அமைச்சர் நாஞ்சில் மனோகரனுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இணைந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989 இல் மொடக்குறிச்சி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991 இல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். 1996 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இந்த தொகுதியில் 1306 பேர் போட்டியிட்டார். இதனால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் சுப்புலட்சுமி வெற்றி பெற்றார்.

மத்திய, மாநில அமைச்சராக...

இரண்டு முறை கருணாநிதி அமைச்சரவையில் இருந்த அவர், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி மத்திய சமூக நலம் மற்றும் வலிமையூட்டல் துறை இணை அமைச்சராக மன்மோகன் சிங் சிங் அமைச்சரவையில் பணியாற்றினார்.

திமுகவில் கருணாநிதி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.1996 இல் முன்னாள் சமூக நல அமைச்சர் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவுக்கு பிறகு அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

திமுகவில் உள்ள ஒரே பெண் துணை பொதுச்செயலாளர். பெரியார் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஏற்கனவே தனது உடல்நிலை காரணமாக இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்திருந்தார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 280 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் டாக்டர் சரஸ்வதியிடம் தோல்வியுற்றார்.

தேர்தல் ஏற்படுத்திய தீராத மனக்காயம்

இதற்கு அத்தொகுதியில் உள்ள அமைச்சர் சு.முத்துசாமி ஆதரவாளர்களான திமுக நிர்வாகிகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்க முதல்வர் நினைத்திருந்தார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

ஏற்கனவே அவரது கணவர் ஜெகதீசன் முகநூலில் திமுகவை பல்வேறு வகையில் விமர்சித்து வந்தார். சுப்புலட்சுமி தோல்விக்குப் பிறகு அந்த விமர்சனம் மேலும் கூர்மையானது.  

அண்மையில் வைகோவுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டது, தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையைக் காட்ட முடியுமா என கேள்வி எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை அவர் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

உள்கட்சிப் பிரச்னைகள் குறித்தும் பல கருத்துக்கள் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா உள்பட பல நிகழ்ச்சிகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியே கட்சியிலிருந்தும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். 

அதில் ஏற்கனவே உடல்நிலை காரணமாக இனி போட்டியிடுவதில்லை என முடிவெடுத்ததாகவும் கருணாநிதி மறைவுக்குப் பிறகு 2021 இல் திமுக ஆட்சி வருவதற்கும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்று கூறி அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த திடீர் முடிவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய முத்துசாமி 12 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்த போதிருந்து இந்த இரண்டு மூத்த நிர்வாகிகள் இடையே பனிப்போர் நிலவியது. அது தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது.

சுப்புலட்சுமி வெற்றி பெற்றால் முத்துசாமி செல்வாக்கு மாவட்டத்தில் குறைந்துவிடும் என்று முத்துசாமி ஆதரவாளர்கள் பலர் நினைத்தனர். அதுவும் சுப்புலட்சுமியின் தோல்விக்கு ஒரு காரணம். சுப்புலட்சுமி விலகலைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலர் திமுகவை விட்டு வெளியேறலாம் என கருதப்படுகிறது.

ஏற்கனவே முத்துசாமியின் நேர்மையான, ஊழலற்ற நடவடிக்கைகள் காரணமாக பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் என்கேகேபி.ராஜா ஆதரவாளர்கள் பலர் ஒதுக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா மாவட்டச் செயலாளராக இருந்தபோது ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. தற்போது இரண்டு மாவட்டச் செயலாளர்கள் இருந்தும் ஈரோடு கிழக்கு திருமகன் காங்கிரஸ், ஈரோடு மேற்கு முத்துசாமி, அந்தியூர் வெங்கடாசலம் திமுக என 8 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே திமுக கூட்டணி வென்றது. ஆனால், அதற்கு அடுத்து கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் சமாதானத்தை ஏற்கவில்லை

திராவிடக் கொள்கையில் ஆழப்பற்றுடைய சுப்புலட்சுமி திமுகவில் தொடர வேண்டும் என்பது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், மனோதங்கராஜ் ஆகியோர் முதல்வரின் பிரநிதிகளாக சுப்புலட்சுமியிடம்  பேசிய பிறகும், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

2021 தேர்தல் ஏற்படுத்திய காயம், கசப்பான அனுபவம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் 40 ஆண்டு கால திமுக அரசியல் பயணத்திலிருந்து கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com